
புதுக்கோட்டை
மக்களின், அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசும், தமிழக அரசும் பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்துகிறது என்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ்.
புதுக்கோட்டை மாவட்டம், ஊராட்சி ஒன்றியம் கவிநாடு மேற்கு ஊராட்சி அகரப்பட்டியில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்திழ் கீழ் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு ஆட்சியர் சு.கணேஷ் வழங்கினார்.
அப்போது அவர் பேசியது: "கிராமங்களில் அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
கிராமங்களில் உள்ள குடிசைகளில் வாழ்வோர் அனைவருக்கும் பாதுகாப்பான சிமென்ட் காங்கிரீட் வீடுகள் கட்டித் தரும் வகையில் பாரத பிரதமரின் ஆவாஸ் யோஜனா என்னும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி, புதுக்கோட்டை மாவட்டம், கவிநாடு மேற்கு ஊராட்சி அகரப்பட்டியில் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டிய மூன்று பயனாளிகளுக்கு வீட்டிற்கான சாவிகளும், மேலும் 30 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளன.
இதேபோன்று தமிழக முதல்வரும் சிறப்பான மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். தற்போது மருத்துவம், உயர்கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவின் முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.
கிராமப்புறங்களில் சுகாதாரத்தில் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக முன்னேற்றமடைய அனைவரும் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும்.
சுவச் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் கழிவறை இல்லாத அனைத்து வீடுகளுக்கும் ரூ.12000 வழங்கப்பட்டு தனிநபர் கழிவறைகள் கட்டித் தரப்படுகின்றன.
பிரதம மந்திரியின் விபத்து காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு ஆண்டுக்கு மாதம் ரூ.12 மட்டும் பிரிமீயம் தொகை செலுத்தினால் விபத்து மரணத்திற்கு ரூ.2 இலட்சமும், பிற காயங்களுக்கு ரூ.50000 -ம் வழங்கப்படுகிறது.
மேலும், ரூ.380 பிரிமீயம் தொகை செலுத்தினால் ரூ.4 இலட்சம் விபத்து காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. கிராமப்புறங்களில் விபத்து காப்பீட்டுத் திட்டம் குறித்து மக்களிடையே அலுவலலர்கள் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
உஜாலா திவாஸ் திட்டத்தின் கீழ் 9 வாட் திறன் கொண்ட எல்இடி பல்புகள் மக்களுக்கு ரூ.50 க்கு வழங்கப்படுகிறது. இதன்மூலம் மிகக் குறைந்த மின் செலவே ஏற்படும்.
இதுபோன்று கிராமங்களில் செயல்படுத்தப்படும் அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து மக்கள் உரிய விழிப்புணர்வு பெற்று பயன்படுத்தி கொள்ளவேண்டும்" என்று அவர் பேசினார்.
இந்த விழாவுக்கு மத்திய உள்துறை உதவி செயலர் ராதாராணி முன்னிலை வகித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சந்தோஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் குமாரவேல், வட்டாட்சியர் தமிழ்மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.