
சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் துறைகளில் உயர் கல்வி பட்டப்படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அத்துடன் அண்ணா பல்கலைக்கழகம் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
பொறியியல் படிப்பிற்கு முக்கியமான பல்கலைக்கழகமான இதன் கீழ் வரும் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் பல லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்புகளைப் படித்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா பாதிப்புகள் குறைந்து நிலைமை சீராகி உள்ளதால் நேரடி செமஸ்டர் தேர்வு, அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை உள்ளிட்டவை தொடங்கவுள்ளன.
பொறியியல் படிப்புக்கான மாணவர்களுக்கான சிறப்புக் கலந்தாய்வு ஆகஸ்ட் 16ஆம் தேதி தொடங்குகிறது. அதே போல் பொது பிரிவினருக்கான பொதுக் கலந்தாய்வு ஆகஸ்ட் 22ஆம் தேதி தொடங்குகிறது. அதே போல் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான முன்பதிவு ஜூன் 20 முதல் ஆன்லைனில் தொடங்க உள்ளது. விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும் அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவும் ஜூலை 19ஆம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாணவர் சேர்க்கை குறித்து, அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் இருப்பதாகக் கூறி, முன்பணம் கேட்டு வரும் இ-மெயில்கள் போலியானவை என்று மாணவர்களுக்கு, அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாணவர் சேர்க்கை, கலந்தாய்வு தொடர்பாக வரக்கூடிய போலி இ - மெயில்களை நம்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை, கலந்தாய்வு பற்றி நேரிலோ, www.annauniv.edu ல் மட்டுமே அறிந்துக்கொள்ளுங்கள் என்று அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: வேலூரில் பின்னிருக்கையில் ஹெல்மெட் போடாமல் பயணித்தால் அபராதம்.. இன்றுமுதல் அமல் ..