
கோயம்புத்தூர்
வண்டல் மண் எடுத்து செல்ல தினமும் 200 டிராக்டர்கள், 50 டிப்பர் லாரிகள் வந்து செல்வதால் நடந்து செல்ல முடியாத அளவுக்கு சாலை சேதம் அடைந்தது. இதனால் சினம் கொண்ட மக்கள் 50 டிராக்டர்களை சிறைபிடித்து “சாலையை சீரமைக்காமல் மண் எடுக்க கூடாது” என்று உத்தரவிட்டனர்.
கோயம்புத்தூர் மாவட்டம். ஆனைமலையை அடுத்த சுள்ளிமேட்டுபதிப் பகுதியில் 150 ஏக்கர் பரப்பளவில் குளப்பத்துக் குளம் உள்ளது.
பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் இந்தக் குளத்தில் வண்டல் மண் எடுக்க கடந்த மாதம் தமிழக அரசு அனுமதி வழங்கியது.
இந்தக் குளத்தில் தினமும் 200 டிராக்டர்கள் மற்றும் 50 டிப்பர் லாரிகளில் வண்டல் மண் எடுத்து வருவதால் ஆனைமலை சுள்ளிமேட்டுபதி சாலை மிகவும் சேதமடைந்தது.
இதனிடையில் மழை பெய்ததால் உழுதுப் போட்ட வயல்போல் சாலை காட்சியளிக்கிறது. இதனால் அந்தப் பகுதி மக்கள் சாலையில் நடந்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி காயம் அடைவதும் நடந்தேறுகிறது.
குளப்பத்துக்குளத்தில் மண் எடுத்துச் செல்லும் டிராக்டர் மற்றும் லாரிகளால் சாலை சேதம் அடைந்ததாக கூறி சினம் அடைந்த மக்கள் நேற்று காலை வெப்பரை சாலையில் திரண்டனர். பின்னர் அவர்கள், “சாலையை சீரமைக்காமல் குளத்தில் வண்டல் மண் எடுக்க கூடாது” என்று உத்தரவிட்டு அந்த வழியாக வந்த 50–க்கும் மேற்பட்ட டிராக்டர்களை சிறைபிடித்தனர்.
இதுகுறித்த தகவலறிந்த பொதுப்பணித் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விவசாயிகள் மற்றும் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, சேதமடைந்த சாலையில் உடனடியாக மண் கொட்டி சரி செய்ய பொதுப்பணித் துறையினர் ஏற்பாடு செய்தனர். இதனால் சமாதானம் அடைந்த மக்கள் டிராக்டர்களை விடுவித்தனர்.