
பெரம்பலூர்
மின் துறையை தனியாருக்கு விற்க கூடாது என்றும் விற்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்றும் மின் அரங்க பேரவையின் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் வட்ட மின் அரங்க பிராக்ஷன் பேரவையின் முதல் மாநாடு நேற்று நடைப்பெற்றது.
இந்த மாநாட்டை, மூத்த உறுப்பினர் புஷ்பராஜ் தொடங்கி வைத்தார். அமைப்பாளர் எஸ். அகஸ்டின் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலர் ஆர். மணிவேல், செயற்குழு உறுப்பினர் ஆர். அழகர்சாமி உள்ளிட்டோர் பேசினர்.
இந்த மாநாட்டில், "மின் வாரிய ஊழியர்களின் ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையில் காலதாமதம் செய்யாமல் 1.12.2015 முதல் உள்ள நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
மின் துறையை தனியாருக்கு விற்கும் முயற்சியை கைவிட வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த மாநாட்டில் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில், இடைக்கமிட்டி செயலராக எஸ். அகஸ்டின், நிர்வாகிகளாக ஆர். ராஜகுமாரன், வி. தமிழ்ச்செல்வன், கே. கண்ணன், கே. குமாரசாமி, ஆர். கண்ணன், டி. ஆறுமுகம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.