
சென்னை, தேனாம்பேட்டை டிஎம்எஸ் பேருந்து நிறுத்தம் அருகே அண்ணா சாலையில் இன்று மாலை திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்காக அண்ணா சாலையில் சிம்சன் முதல் கிண்டி வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அண்ணா சாலையில் அடிக்கடி பள்ளம் விழுவதும் அது சரி செய்யப்படுவதும் தொடர்கதையாக வருகின்றன.
கடந்த ஏப்ரல் மாதம் சென்னை அண்ணா சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. அந்த பள்ளத்தில் ஒருகாரும், பேருந்தும் விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டது.
இந்நிலையில் சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள தேனாம்பேட்டை டிஎம்எஸ் பேருந்து நிறுத்தம் அருகே இன்று இரவு 7 மணியளவில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
பள்ளம் ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பள்ளத்தை சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் செல்ல அனுமதிக்கவில்லை.
ஜெமினி பாலம் வழியாக செல்லும் வாகனங்கள் தி.நகர் விஜயராகவா சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. தேனாம்பேட்டை செல்லும் வாகனங்கள் ஒருவழி பாதையாக மாற்றிவிடப்பட்டுள்ளன.