சிவகங்கை தொகுதியை குறி வைத்து திமுக பிரமுகர்கள் பலரும் காய் நகர்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, தேர்தலில் சீட் வாங்கும் பொருட்டு கட்சி பிரமுகர்கள் பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியுள்ளது. பாஜகவுடன் மீண்டும் கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எனவே, அதிமுக, பாஜக ஆகிய இரு கட்சிகளும் தனித்தனியாக கூட்டணி அமைத்து தேர்தல் களம் காணும் என தெரிகிறது.
அதேசமயம், திமுக கூட்டணி தமிழகத்தில் வலுவாக உள்ளது. ஏற்கனவே கூட்டணியில் உள்ள கட்சிகள் அப்படியே தொடர்கின்றன. இந்த முறை கூடுதல் இடங்களில் போட்டியிட திமுகவும், கூடுதல் இடங்களை கேட்க கூட்டணி கட்சிகளும் திட்டமிட்டுள்ளன கமல்ஹாசன் போன்றோர் புதிதாக திமுக கூட்டணியில் இணையவுள்ளதால், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை மிகவும் கவனமுடன் திமுக கையாண்டு வருகிறது.
அத்துடன், எதிர்வரவுள்ள தேர்தலில் திமுக கூட்டணி தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளதால், கட்சியின் சீனியர்கள் முதல் ஜூனியர்கள் வரை பலரும் சீட்டுக்காக முட்டி மோதுகின்றனர்.
அந்த வகையில், சிவகங்கை தொகுதியை குறி வைத்து திமுக பிரமுகர்கள் பலரும் காய் நகர்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இரண்டு சட்டமன்றத் தொகுதிகளையும், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கியது சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி. சிவகங்கை தொகுதியை பெரும்பாலும் கூட்டணி கட்சியான காங்கிரஸுக்குத்தான் திமுக ஒதுக்கும். இந்த தொகுதியில் காங்கிரஸை தவிர, அதிமுக, பாஜகவுக்கும் கணிசமாக வாக்கு வங்கி உள்ளது.
ஆனால், இந்த முறை சிவகங்கை தொகுதியை திமுகவுக்கே ஒதுக்க வேண்டும் என அக்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். சென்னையில் கடந்த ஜனவரி மாதம் 29ஆம் தேதி நடைபெற்ற திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், சிவகங்கை தொகுதியை திமுகவுக்கு ஒதுக்க வேண்டுமென அம்மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
அதேசமயம், சிவகங்கை தொகுதியில் மீண்டும் போட்டியிட கார்த்தி சிதம்பரம் விருப்பம் தெரிவித்து வருகிறார். ஆனால், அவருக்கு அத்தொகுதியை ஒதுக்கக் கூடாது என அக்கட்சிக்குள்ளேயே போர்கொடி தூக்கி வருகின்றனர். “சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரம் போட்டியிட்டால் பிரச்சினை இருக்காது எனவும், கார்த்தி சிதம்பரம் வாய்ப்பு கேட்டால் மற்றவர்கள் கேட்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து கட்சி மேலிடம் முடிவெடுக்கும்.” என காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
மாநில, தேசிய கட்சிகள் எப்படி அங்கீகரிக்கப்படுகின்றன? என்னென்ன தகுதிகள் வேண்டும்?
சிவகங்கை தொகுதியை பொறுத்தவரை அதிமுக சார்பில் கோகுல இந்திரா போட்டியிட அதிக வாய்ப்புள்ளது. ஹெச்.ராஜா அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதால், பாஜகவை சேர்ந்த பலரும் அந்த தொகுதியில் போட்டியிட விருப்பம் காட்டி வருகின்றனர். ஆனால், அதிமுக கூட்டணி இல்லாமல் பாஜக அந்த தொகுதியில் சோபிப்பது கடினமே.
இருப்பினும், திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு சிவகங்கை தொகுதியில் கணிசமான செல்வாக்கு உள்ளது. அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்று அமைச்சராக உள்ள ராஜ கண்ணப்பனின் ஊர் என்பதால், அவருக்கு அங்கு தனிப்பட்ட முறையில் செல்வாக்கு உள்ளது. இதுபோன்ற விஷயங்களால் திமுக கூட்டணி அங்கு வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது என்கிறார்கள். எனவே, சிவகங்கை தொகுதியை திமுகவுக்கே ஒதுக்க வேண்டும் என அக்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
ஒருவேளை திமுகவுக்கு சிவகங்கை தொகுதி ஒதுக்கப்படும் பட்சத்தில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் மகன் அண்ணாமலை, சிவகங்கை மாவட்டத் துணைச் செயலாளர்கள் சேங்கை மாறன், ஜோன்ஸ் ரூசோ, திமுக மாநில மாணவரணி துணைச் செயலாளர் பூர்ணா சங்கீதா அகியோர் முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், ராமநாதபுரம் தொகுதி இல்லையென்றால் சிவகங்கை தொகுதியில் போட்டியிட திமுக மாநில செய்தி தொடர்பு மாநில இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி விருப்பம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பனும் சிவகங்கை தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கருப்பு, சிவப்பு வேட்டி கட்டாத திமுக காரர் கரு.பழனியப்பன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். உதயநிதியிடம் உள்ள நெருக்கத்தில் சிவகங்கை தொகுதியில் சீட் வாங்க கரு.பழனியப்பன் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்தியா கூட்டணிக்கு அடுத்த அடி: ஜம்மு-காஷ்மீரில் தனித்து போட்டி - ஃபரூக் அப்துல்லா அறிவிப்பு!
ஆனால், திமுக கொள்கை சார்ந்துதான் கரு.பழனியப்பன் பேசி வருகிறாரே தவிர அவருக்கு தேர்தல் அரசியலில் இப்போதைக்கு விருப்பமில்லை என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். களத்தில் இறங்கி வேலை பார்க்காமல் காரைக்குடிக்காரர் என்பதற்காக மட்டுமே திடீரென சீட் கேட்க முடியாது என்பதை கரு,பழனியப்பனும் உணர்ந்தே இருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.
அதேசமயம், திமுகவுக்கு சிவகங்கை தொகுதி ஒதுக்கப்படும் பட்சத்தில், அமைச்சர் ராஜ கண்ணப்பன் தனது ஆதரவாளர் ஒருவருக்கு சீட் வாங்கி தர முயற்சித்து வருவதாக தெரிகிறது. அண்மைக்காலமாகவே உதயநிதியுடன் நல்ல ரேப்போவில் இருக்கிறார் ராஜ கண்ணப்பன். தொகுதியிலும் ஏற்கனவே செல்வாக்கு உள்ளது. எனவே, அவர் கைக்காட்டும் நபருக்கு திமுக மேலிடம் வாய்ப்பளிக்கக்கூடும் என்கிறார்கள்.