
மதிமுகவில் இருந்து விலகிய அக்கட்சியின் முன்னாள் கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத், மேடைகளில் தொடர்ந்து திராவிட இயக்கத்துக்கு ஆதரவாக பேசி வந்தார். இந்த நிலையில், சென்னையில் ‘தி.மு.க 75 அறிவுத் திருவிழா' நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் திராவிட இயக்க பேச்சாளர்கள் அனைவரும் பங்கேற்று பேசி வருகின்றனர்.
ஆனால் வைகோ போன்று தனது பேச்சால் அனைவரையும் கவர்ந்திழுக்கக்கூடிய திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. நாஞ்சில் சம்பத் சமீப காலமாக நடிகர் விஜய்ய்யின் தவெக கட்சிக்கு ஆதரவாக பேசி வருகிறார். ஏற்கெனவே விஜய் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக பேசியதாலேயே திமுகவின் அறிவுத் திருவிழாவுக்கு நாஞ்சில் சம்பத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தகவல் வெளியானது.
இந்நிலையில், ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த நாஞ்சில் சம்பத், தவெகவுக்கு ஆதரவாக பேசியதால் திமுக தனக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று தெரிவித்தார். இது தொடர்பாக பேசிய நாஞ்சில் சம்பத், ''திமுகவுக்கு தவெக தான் சவாலாக இருக்கும் அந்த உண்மையைத் தான் நான் சொன்னேன். திமுகவுக்கு அதிமுக சவாலாக இருக்காது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 13 இடங்களில் 3வது இடத்தையும், ஒரு தொகுதியில் டெபாசிட்டையும் இழந்தது. ஒரு தொகுதியில் 4வது இடத்துக்கு சென்றது. ஆகவே தான் நான் திமுகவுக்கும், தவெகவுக்கும் நேரடி போட்டி என்று கூறினேன் என்றார்.
தவெக கொடியில் தமிழர் பண்பாடு
தொடர்ந்து பேசிய நாஞ்சில் சம்பத், ''தம்பி விஜய் கட்சி ஆரம்பித்தவுடன் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று அவர் சொன்னவுடன் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். மேலும் தவெக கொடியில் தமிழர்களின் அடையாளமாக இருக்கும் யானை, போருக்கு செல்லும்போது தமிழ் மன்னர்கள் சூடிக்கொள்ளும் வாகைப் பூக்கள் இடம்பெற்றுள்ளன. இவையெல்லாம் விஜய் கட்சி கொடியில் இருக்கும்படி செய்தது எனக்கு மனநிறைவை தந்தது.
தவெகவுக்கு கிடைத்த வெற்றி
இது தமிழ் பண்பாட்டை நோக்கிய நல்ல அடையாளமாக, நகர்வாக நான் கருதுகிறேன். கரூர் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தவெகவுக்கு கிடைத்த வெற்றியாகும். அடுத்த அடியை எப்படி எடுத்து வைப்பது என கலங்கி நிற்கும் தவெகவுக்கு ஒரு வாசலை உச்சநீதிமன்றம் திறந்து வைத்துள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.