வீட்டில் பணிபுரிந்த சிறுமியை தாக்கிய வழக்கில் திமுக எம்.எல்.ஏ. மகன், மருமகள் ஜாமீன் கோரிய வழக்கில் வருகிற 6ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்டோ மதிவாணனும், அவரது மனைவி மெர்லினாவும் தங்களது வீட்டில் பணிபுரிந்த 18 வயது பணிப்பெண்ணை அடித்து துன்புறுத்தியதாக புகார் எழுந்தது. இதன் பேரில், வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நீலாங்கரை அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனிடையே, தலைமைறைவான எம்.எல்.ஏ. மகனும், மருமகளும் தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என மறுப்பு தெரிவித்தனர். தொடர்ந்து அவர்கள் இருவரையும் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதையடுத்து, அவர்கள் இருவரையும் ஆந்திரா அருகே தமிழக தனிப்படை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் இருவரும் பிப்ரவரி 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தமிழக வெற்றி கழகம்: ஊடக விவாதங்களில் கலந்து கொள்பவர்கள் விவரம்!
இந்த நிலையில், திமுக எம்.எல்.ஏ. மகனும், மருமகளும் தங்களுக்கு ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கானது நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், ஜாமீன் கோரிய மனு மீது பிப்ரவரி 6ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என கூறி அன்றைய தினத்துக்கு வழக்கு விசாரணையை நீதிபதி தள்ளி வைத்தார்.