உயர்கல்வித்துறை அமைச்சராக மீண்டும் பொன்முடி பதவியேற்பு!

By Manikanda PrabuFirst Published Mar 22, 2024, 4:07 PM IST
Highlights

தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி மீண்டும்  பதவியேற்றுக் கொண்டார்.
 

தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், அண்மையில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், பொன்முடி, அவரது மனைவி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 50 லட்சமும் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதனால், அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் பொன்முடி உடனடியாக இழந்தார். மேலும், பொன்முடி எம்.எல்.ஏ.வாக இருந்த திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையையும், அவர் குற்றவாளி என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. அத்துடன், முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சிக்கு ஜாமின் வழங்கியும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்மூலம், பொன்முடியால் அமைச்சராகவும், எம்.எல்.ஏ.வாகவும் தொடர முடியும் என்ற நிலை உருவானது.

இதையடுத்து, திருக்கோயிலூர் சட்டமன்றத் தொகுதி காலியாக உள்ளதாக அறிவித்த அறிவிக்கையை தேர்தல் ஆணையம் திரும்பப்பெற்றுக் கொண்டது. தொடர்ந்து, பொன்முடியை அமைச்சராக நியமிக்கவும், அவருக்கு உயர் கல்வித்துறையை ஒதுக்கிடவும் கோரி ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். ஆனால், அதனை தமிழ்நாடு ஆளுநர் ஏற்கவில்லை. பொன்முடிக்கான தண்டனைதான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் விடுவிக்கப்படவில்லை என்பதால் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது என ஆளுநர் ரவி மறுப்பு தெரிவித்து விட்டார்.

இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.  இந்த வழக்கின் மீதான விசாரணையின்போது, தமிழ்நாடு ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கடுமையான கண்டனம் தெரிவித்தது. தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி உச்ச நீதிமன்றத்துடன் விளையாடுகிறாரா? உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்படுகிறாரா? என கடுமையான கேள்விகளை உச்ச நீதிமன்றம் எழுப்பியது.

தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: விருதுநகரில் விஜயகாந்த் மகன் போட்டி!

மேலும், பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் விவகாரத்தில் 22ஆம் தேதி (இன்று) மாலைக்குள் தமிழ்நாடு ஆளுநர் முடிவெடுக்க வேண்டும். இல்லை என்றால் நாங்களே எங்கள் முடிவை அறிவிப்போம். நீங்கள் முடிவு எடுக்கவில்லை என்றால் நாங்கள் உத்தரவு பிறப்பிப்போம். நாங்கள் அதை இப்போது சொல்லப் போவதில்லை எனவும் ஆளுநர் ரவிக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.

அதன் தொடர்ச்சியாக, தனது செயலுக்கு உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட ஆளுநர் ரவி, பொன்முடிக்கு தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் பொறுப்பு வழங்கிட ஒப்புதல் அளிப்பதாக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார். அதன்படி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி மீண்டும்  பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

click me!