
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தொகுதியில் திமுக எம்.எல்.ஏ ஆக இருந்து வருபவர் துரை சந்திரசேகரன். இவர் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்பு நிகழ்ச்சியை முடித்து விட்டு தனது காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஒரு பைக்கும், திமுக எம்.எல்.ஏ சென்ற காரும் நேருக்கு நேர் மோதியது. இதில் பைக்கில் சென்ற அந்த நபர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்து விரைந்து வந்தனர். விசாரணையில் திமுக எம்.எல்.ஏ கார் மோதி பலியானது சென்னமானாடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (65) என்பதும் வயல் வேலைக்காக தனது பைக்கில் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது. காவல்துறையினர் கோவிந்தராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து எப்படி ஏற்பட்டது? யார் மீது தவறு? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திமுக எம்.எல்.ஏ கார் மோதி ஒருவர் பலியான சம்பவம் ஒரத்தநாடு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.