
தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே சேலம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி சம்பவ உயிரிழந்தனர். சேலம் நோக்கி அதிவேகமாக சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற இருசக்கர வாகனம் மற்றும் ஆம்னி கார் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் மற்றும் ஆம்னி வேனில் சென்ற ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்த 3 பேர் மீட்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
மேலும் உயிரிழந்த 4 பேர் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதில், லாரி ஓட்டுநர் அதிவேகமாக சென்றதும், கட்டுப்பாட்டை இழந்ததுமே விபத்துக்கு முக்கியக் காரணம் என்று தெரியவந்துள்ளது. லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொப்பூர் பகுதிகளில் அவ்வப்போது விபத்து ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.