
தமிழகத்தில் S.I.R எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. S.I.R பணிகள் மூலம் தமிழக மக்களின் வாக்குரிமையை மத்திய பாஜக அரசு பறிக்க முயல்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் S.I.R பணிகளுக்கு எதிராக உள்ளன.
இந்த நிலையில், தென்காசி மாவட்ட திமுக சார்பில் S.I.R பணிகளுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தென்காசி எம்.பி ராணி ஸ்ரீகுமார், சங்கரன்கோயில் எம்.எல்.ஏ E.ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன், பிரதமர் மோடியை அவன், இவன் என்று ஒருமையில் பேசி, பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
''மக்களின் வாக்குரிமையை காப்பதற்கே நாங்கள் களத்தில் நிற்கிறோம். உங்கள் வாக்குகளை பறிக்க துடிக்கிறான் மோடி. அவன் இன்னொரு நரகாசுரன். அவனை தீர்த்துக் கட்டினால் தான் தமிழ்நாடு நன்றாக இருக்கும். ஆகவே ஒன்று சேருவோம். வென்று காட்டுவோம்'' என்று ஜெயபாலன் பேசியுள்ளார். திமுக பிரமுகர் நாட்டின் பிரதமரை ஒருமையில் பேசி, கொலை மிரட்டல் விடுக்கும்போது அருகில் இருந்த எம்.பி மற்றும் எம்.எல்.ஏ அவரது பேச்சை ரசித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்றுக் கொள்ள முடியாத செயல்
அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். மத்திய பாஜக அரசு மீது பல்வேறு விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அதை கருத்துகளால் மட்டுமே எதிர்கொள்ள வேண்டும். ஆனால் அதை விடுத்து பிரதமருக்கே திமுக தலைவர் இப்படி கொலை மிரட்டல் விடுப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஒரு ஆளும் கட்சி, அதுவும் இந்தியாவின் பெரிய கட்சிகளின் ஒன்றான திமுகவுக்கு அழகல்ல.
பாஜகவினர் கடும் கண்டனம்
பிரதமரை மிரட்டிய ஜெயபாலனுக்கு கண்டனம் தெரிவித்த பாஜகவினர், ''இதுதான் திமுகவின் கீழ்த்தரமான அரசியல். இப்படி பிரதமருக்கு எதிராக கேவலமாக பேச விட்டு பார்ப்பது தான் அவர்களின் வேலை. பிரதமருக்கு மிரட்டல் விடுத்த நபர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்து வருகின்றனர்.