
தமிழகத்தில் குடும்ப ஆட்சிக்கும், வாரிசு அரசியலுக்கும் வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் முற்றுப்புள்ளி வைக்கும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் வீரபாண்டி தொகுதியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடினார்.
"திமுக என்பது ஒரு அரசியல் கட்சியே கிடையாது; அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அங்கு குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு மட்டும்தான் பதவி கிடைக்கும். அதிக நாட்கள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த துரைமுருகனுக்குக் கூட துணை முதல்வர் பதவி வழங்கப்படவில்லை. அவர் கருணாநிதி குடும்பத்தில் பிறக்கவில்லை என்பதுதான் அதற்கு ஒரே காரணம்," என்று விமர்சித்தார்.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்துப் பேசிய அவர், மாநிலத்திற்கு நிரந்தர டிஜிபி இல்லாததைச் சுட்டிக்காட்டினார். "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய டிஜிபி-யே இல்லை. மக்களைப் பாதுகாக்கும் எண்ணம் முதல்வருக்கு இருந்தால் உடனடியாக டிஜிபி-யைப் பணியமர்த்த வேண்டும். இன்று இளைஞர்கள் போதைப்பொருட்களால் சீரழிகின்றனர். திருத்தணியில் வடமாநில தொழிலாளர்களைச் சிறுவர்கள் தாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது, ஆனால் இதைப் பற்றி ஸ்டாலினுக்குக் கவலையில்லை," என்றார்.
திமுக அரசின் நிதி மேலாண்மை குறித்து விமர்சித்த அவர், "100 நாள் வேலைத் திட்டத்தில் முறையாகச் சம்பளம் கூட வழங்க முடியாத கையாலாகாத அரசாக திமுக உள்ளது. நிதி இல்லை என்று முதல்வர் கூறுகிறார், ஆனால் துணை முதல்வர் உதயநிதி கார் பந்தயம் நடத்துகிறார். இது எத்தகைய மக்கள் நலன்?" என்று கேள்வி எழுப்பினார்.
மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும் என்ற திமுகவின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என்று குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, "சேலம் மாவட்டம் எப்போதும் அதிமுகவின் கோட்டை. திமுக ஆளுங்கட்சியாக இருந்தாலும் இங்கு அவர்களால் எந்தத் திட்டத்தையும் கொண்டுவர முடியவில்லை. வரும் 2026 தேர்தலில் அதிமுக பெரும்பான்மையான இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியில் அமரும்," என்று உறுதியளித்தார்.
வாரிசு அரசியல் மற்றும் குடும்ப ஆட்சிக்கு மக்கள் இந்தத் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.