திமுக-வை ஒழிச்சு கட்டுறதுதான் நம்ம வேலை.. ஸ்டாலின் கனவு ஒருபோதும் பலிக்காது.. அமித் ஷா அட்டாக்!

Published : Jan 04, 2026, 07:41 PM IST
Amit shah Stalin

சுருக்கம்

புதுக்கோட்டையில் நடைபெற்ற நயினார் நாகேந்திரனின் யாத்திரை நிறைவு விழாவில் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, திமுக ஒரு ஊழல் மற்றும் வாரிசு அரசியல் கட்சி என கடுமையாக சாடினார். வரும் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற மாநிலந்தழுவிய யாத்திரையின் நிறைவு விழா இன்று புதுக்கோட்டை மாவட்டம் பள்ளத்திவயலில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடினார்.

"மன்னிப்பு கோருகிறேன்"

மேடையில் தனது உரையைத் தொடங்கிய அமித் ஷா, "மகத்தான மற்றும் மாபெரும் மொழியான தமிழில் உங்களோடு உரையாட முடியவில்லை என்பதற்கு நான் மன்னிப்பு கோருகிறேன்" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், "மக்களே, மோடியின் தலைமையில் நாம் அனைவரும் அணிவகுப்போம். வரும் ஏப்ரல் மாதம் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) ஆட்சி மலரும்" என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

திமுகவை ஒழித்தே தீர வேண்டும்

திமுக ஆட்சியை ஊழல் ஆட்சி எனச் சாடிய அமித் ஷா, "எப்பாடுபட்டாவது, எப்படியாவது தமிழகத்திலிருந்து திமுகவை ஒழித்தே தீர வேண்டும். திமுக ஒரு மிகப்பெரிய ஊழல் கட்சி. தமிழக அரசின் ஒரே நோக்கம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதியை எப்படியாவது அடுத்த முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்பதுதான். ஆனால், உங்களின் இந்த வாரிசு அரசியல் கனவு ஒருபோதும் பலிக்காது," என்று ஆவேசமாகப் பேசினார்.

கூட்டணி குறித்துப் பேசிய அவர், "அதிமுக - பாஜக கூட்டணி என்பது ஒரு வெற்றிகரமான கூட்டணி. 1998, 2019 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் நாம் இணைந்து தேர்தல்களைச் சந்தித்துள்ளோம். இந்த வலுவான கூட்டணி மீண்டும் இணைந்து தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்," என்றார்.

தமிழுக்கு மோடி செய்த நன்மைகள்

"பாஜக அரசு தமிழுக்கு எதிரானது என முதல்வர் ஸ்டாலின் பொய்ப் பிரச்சாரம் செய்கிறார். ஆனால் மோடி தலைமையிலான அரசுதான். ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப் பணித் தேர்வுகளைத் தமிழில் எழுதும் உரிமையை அறிவித்தது. அனைத்து ரயில் நிலையங்களிலும் தமிழில் அறிவிப்புகள் வருவதை உறுதி செய்தது. மத்திய அரசு தமிழை உயர்த்திப் பிடிக்கிறது, ஆனால் திமுக அதை அரசியலுக்குப் பயன்படுத்துகிறது," எனக் குற்றம் சாட்டினார்.

நயினார் நாகேந்திரனின் இந்தப் பயண நிறைவு விழாவில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜுன் ராம் மெஹ்வால், மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எங்க போனாலும் திமுக-வை திட்றாங்க.. தலையாட்டி பொம்மையாக மாறிய ஸ்டாலின்.. அண்ணாமலை ஆவேசம்!
3 மாதம் விரதம் இருந்து வேலை பாருங்க! அமித் ஷா முன் திமுக-வை பிரிச்சு மேய்ந்த நயினார்!