கச்சத்தீவை தாரை வார்த்த திமுக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

By SG Balan  |  First Published Apr 1, 2024, 10:14 PM IST

கச்சத்தீவை தாரை வார்த்த விவகாரத்தில் காங்கிரஸ், திமுக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.


கச்சத்தீவை தாரை வார்த்ததற்காக காங்கிரஸ் கட்சி பொதுமக்கள் மத்தியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார். காங்கிரஸும் திமுகவும் சேர்ந்து மன்னிப்பு பிரச்சாரத்தை மக்கள் முன் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கோவை பாராளுமன்ற பாஜக வேட்பாளரும், மாநில தலைவருமான அண்ணாமலை கோவையில் இன்று பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.இதனை தொடர்ந்து அவிநாசி சாலையில் பாஜக தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

Tap to resize

Latest Videos

அப்போது பேசிய அண்ணாமலை, "கச்சத்தீவை தாரை வார்த்த விவகாரத்தில் திமுக இதுவரை காங்கிரசை மட்டுமே குறை கூறி வந்துள்ளது. இதில் திமுக விற்கும் முக்கிய பங்கு உள்ளது என்பதை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் நாங்கள் வெளிக்கொண்டு வந்துள்ளோம். அன்றைக்கு முதல்வராக இருந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு தெரிந்தே தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டுள்ளது. 

கச்சத்தீவு விவகாரத்தில் 21 முறை கடிதம் எழுதியுள்ளதாக கலைஞர் கருணாநிதி பொய்யாக நாடகமாடியுள்ளார்.பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவின் எந்த ஒரு பகுதியையும் மற்ற நாடுகளுக்கு விட்டுக் கொடுக்காமல் உள்ளது. கச்சத்தீவை தாரை வார்த்ததற்காக காங்கிரஸ் கட்சி பொதுமக்கள் மத்தியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். காங்கிரஸும் திமுகவும் சேர்ந்து மன்னிப்பு பிரச்சாரத்தை மக்கள் முன் மேற்கொள்ள வேண்டும்" என தெரிவித்தார்.

உயர் அழுத்த மின்கம்பிகளுக்குக் கீழ் நின்று போன் பேசினால் மொபைல் வழியாக மின்சாரம் பாயுமா?

செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது, "இன்று காலை டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் கச்சத்தீவு தாரைவார்கப்பட்ட விவகாரம் குறித்த விரிவான தகவல்களை பத்திரிக்கையாளர்களிடம் எடுத்துக் கூறியுள்ளார்.

இதுவரை கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவினர் பொய்யான தகவல்களையே கூறியுள்ளனர். தங்களுக்கு தெரியாமலே கச்சத்தீவு கொடுக்கப்பட்டதாகவும் இதை கண்டித்து கண்டன போராட்டங்கள் நடத்தியதாகவும் பாராளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் வெளிநடப்பு  செய்ததாகவும் கூறியுள்ளனர்.

ஆனால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்டு வெளியிடப்பட்டுள்ள இது குறித்த ஆவணங்களில் தமிழக மக்களை திமுக ஏமாற்றி இருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. 19 ஜூன் 1974ல் அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதியும், வெளியுறவுத்துறை அமைச்சரும் சந்தித்து பேசிய சுமார் ஒரு மணி நேர சந்திப்பின் குறிப்புகள் வெளிவந்துள்ளது. ஒன்பது பக்கங்கள் கொண்ட இந்த குறிப்பில் கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவின் செயல்பாடுகள் குறித்து தெரிய வருகிறது.இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கச்சத்தீவை கொடுப்பது குறித்து பேசலாம், இப்போது வேண்டாம் என கருணாநிதி கேட்டுள்ளார் என்பது இந்த ஆவணத்தில் உள்ளது.

பின்னர் கச்சத்தீவை இலங்கையிடம் வழங்குவதற்கு கலைஞர் சம்மதம் தெரிவித்ததோடு சிறிய அளவு போராட்டங்கள் செய்வதாகவும் கூறியுள்ளார்.இந்த விவகாரத்தில் 21 முறை அன்றைக்கு முதல்வராக இருந்த திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதி நாடகமாடியுள்ளார். சம்மதம் இல்லை என சொல்லி இருந்த போதும் அரசியல் காரணங்களுக்காக கட்சத் தீவு கொடுக்கப்படுவதை அவர் தடுக்கவில்லை.இதனால் இன்றைக்கு இந்தியாவின் எல்லை சுருங்கி உள்ளது. குறிப்பாக தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதே காங்கிரஸ் திமுக ஆட்சியில் போது தான் அருணாச்சல பிரதேசமும் கொடுக்கப்பட்டது. 2014 ஆண்டுக்கு முன்பு தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதற்கும் 2014 க்கு பிறகு தமிழக மீனவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளுக்கும் காரணம் திமுக தான்.

கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பதே தமிழக பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடு. இதனை வெளிவரவுத்துறை அமைச்சரிடம் கோரிக்கையாகவே வைத்துள்ளோம்.குறிப்பாக தமிழக மீனவர்கள் கட்சத்தீவிற்கு மீன்பிடிக்க செல்ல அனுமதி வழங்கும் Article 6 வாபஸ் பெறப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு இதுவும் முக்கிய காரணமாகும்.

எனவே கச்சத்தீவு விவகாரத்திற்காக காங்கிரஸ் கட்சியும் திமுகவும் மக்கள் மத்தியில் மன்னிப்பு கேட்க வேண்டும்.கச்சத்தீவை மீட்பதற்காக உள்ள அனைத்து சாத்தியங்களையும் மத்திய அரசும் வெளிஉறவுத்துறை அமைச்சகமும் ஆராய்ந்து வருகிறது. பிரதமர் மோடி இதில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறார். கண்டிப்பாக மீனவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.தேர்தல் சமயத்தில் இந்த விவகாரத்தை நாங்கள் எடுக்கவில்லை.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி சில நாட்களுக்கு முன்பு தான் இந்த ஆவணங்கள் கிடைத்தது. எனவே தற்போது இதை மக்கள் முன் வைத்துள்ளோம்.மத்திய அரசு தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை என முதல்வர் தொடர்ந்து பொய்யான பரப்புரை மேற்கொண்டு வருகிறார். ஜல்ஜீவன் திட்டம், பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கான மானியம், ரயில்வே விரிவாக்கம், விமான நிலைய கட்டமைப்பு, புதிய மருத்துவக் கல்லூரிகள் ஆகிய மத்திய அரசின் திட்டங்கள் குறித்து அவர் பேசுவதில்லை.

10 லட்சத்தி 76 ஆயிரம் கோடி அளவிற்கு தமிழகத்திற்கு முத்ரா கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இதில் கோயம்புத்தூர் சிறப்பாக பலனடைந்துள்ளது. கோயம்புத்தூரை பொறுத்தவரை தேவையில்லாத இடங்களில், விஞ்ஞானபூர்வமில்லாத பாலங்கள் கட்டப்பட்டுள்ளது.

மத்திய அரசு சார்பில் வந்தே பாரத் ரயில் கோவையில் இருந்து சென்னைக்கும் பெங்களூருக்கும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சேவை மேலும் அதிகரிக்கப்படும். புதிதாக ரயில் சேவை இட நெருக்கடி காரணமாக கோவை ரயில் சந்திப்பு நிலையத்திற்கு வழங்க முடியவில்லை. அதற்காகவே அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் போத்தனூர் ரயில் நிலையம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இத்தோடு பீளமேடு மற்றும் சிங்காநல்லூர் ரயில் நிலையங்களையும் மேம்படுத்த வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை." என தெரிவித்தார்.

மூளை ஆபரேஷன் முடிந்து கோவை திரும்பிய சத்குரு ஜக்கி! காருக்கு பூ போட்டு வரவேற்பு!

click me!