
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வருகின்ற 21ஆம் தேதி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சாரத்திற்காக வரவுள்ளார். இதனை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில், அக்கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் வைகைச் செல்வன் மற்றும் சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர். எடப்பாடி பழனிச்சாமி வரும் நாள் அன்று, அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் மற்றும் அனைத்து கிளைகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வரவேண்டுமென ஆலோசனை வழங்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன்: உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தில் ஸ்டாலின் பெயரை பயன்படுத்துவதற்கு, நீதிமன்றத்தில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தடை உத்தரவை பெற்று இருக்கிறது. ஸ்டாலின் என்ற பெயரை போட்டு அரசு பணத்தை கொடுப்பதற்கு, இவரது பெயரை ஏன் பயன்படுத்த வேண்டும். இவருடைய பெயரை பயன்படுத்த வேண்டும் என்றால், இவருடைய சொந்த பணத்தை எடுத்து பயன்படுத்தலாமே என முதலமைச்சருக்கு எதிராக குற்றச்சாட்டை முன் வைத்தார்.
நீதிமன்ற அவமதிப்பில் சேரும்
கோடான கோடி பணத்தை கொள்ளை அடித்துக் கொண்டு அவர்களுடைய குடும்பத்திற்காக சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த பணத்தை வைத்துக்கொண்டு, செலவு செய்தால் அவர்களது பெயரை வைத்துக் கொள்ளலாம். அரசு செலவில் இவரது பெயரை பயன்படுத்துவது முறையற்றது , நியாயமற்றது இது நல்ல செயல் அல்ல என தெரிவித்தார். இதுக்குறித்து அதிமுக நீதிமன்றத்திற்கு சென்று தடை உத்தரவை பெற்று இருக்கிறது, தடை உத்தரவு பெற்ற பிறகும் அதையும் மீறி உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தில் ஸ்டாலின் பெயரை பயன்படுத்தி வருகிறார்கள். இது நீதிமன்ற அவமதிப்பில் சேரும் என தெரிவித்தார்.
நமக்கே கண்ணீர் வருகிறது.
திருமணத்திற்காக பெண் சி.ஆர்.பி.எஃப் கொஞ்சம் கொஞ்சமாக திருமணத்திற்காக சேர்த்து வைத்த, அவரது நகைகள் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. அவரது பேட்டியை பார்க்கும்போது நமக்கே கண்ணீர் வருகிறது. வீரர் ஒருவருக்கு இங்கு பாதுகாப்பு இல்லை காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. சிறுமிகள் முதல் வயதானவர்கள் வரை யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது. இப்படிப்பட்ட அரசு தேவையா இப்படிப்பட்ட அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என மக்கள் முடிவெடுத்து விட்டார்கள் என தெரிவித்தார்.
திமுகவிற்கு நடுக்கம்
பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளின் பிரச்சாரம் குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்து பேசுகையில், அதிமுக நல்ல கூட்டணி மெகா கூட்டணியை அமைக்க உள்ளது. பாஜகவுடன் கூட்டணி அமைத்து சிறப்போடு செயல்பட்டு வருகிறோம். அதிமுக கூட்டணியில் மேலும் பல்வேறு கட்சிகள் இணை இருக்கிறது. திமுக கூட்டணி உடைந்து அக்கட்சியிலிருந்து விலகுவதற்கு, அக்கட்சிகள் தயாராகிவிட்டது. எடப்பாடி பழனிச்சாமியின் சுற்றுப்பயணம் கட்சிக்கு, மக்கள் மத்தியில் பேராதரவு பெருகி வருகிறது. மக்களின் ஆதரவை பார்த்தவுடன் திமுகவிற்கு நடுக்கம் வந்துவிட்டது. அண்ணா அதிமுக எட்டாவது முறையாக ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார்.