
கதிராமங்கலத்தில் கைது செய்யப்பட்ட பொது மக்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தை தனி தீவு போல் துண்டாக்கி அங்கு வாழும் மக்கள் மீதும், போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீதும் கண்மூடித்தனமாக தடியடி நடத்தி அராஜகமாக கைது செய்திருப்பதற்கும், அக்கிராமத்தையே போர் பகுதி போல் அறிவித்து ஆயிரக்கணக்கில் போலீஸாரை குவித்து வைத்திருப்பதற்கும் திமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதல் ஜனநாயக உணர்வுகளை நசுக்கும் முயற்சியாக உள்ளது என்றும். பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற்று கதிராமங்கலத்தில் இருந்து போலீசார் வெளியேறுவதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார்.
கதிராமங்கலம் கிராமத்தில் தொடர்ந்து நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டு கொள்ளாத முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குதிரை பேர அரசு, குட்கா போலீஸ் அதிகாரிகள்” சிலரை வைத்துக்கொண்டு பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக, குறிப்பாக பெண்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது மனித உரிமை மீறிய செயல் மட்டுமல்ல, ஜனநாயக உணர்வுகளை நசுக்கும் முயற்சியாகும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் பணிகளால் மக்களின் பாதுகாப்பிற்கும், சுற்றுப் புறச்சூழலுக்கும் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாதவாறு தடுத்து நிறுத்திட வேண்டும் என்றும் , கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.