
தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக - பாஜக கூட்டணியில் தேமுதிகவுக்கு வெறும் 6 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் சென்னை வந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, "அதிமுக 170, பாஜக 25, பாமக 23, மற்றும் தேமுதிக 6 தொகுதிகள்" என ஒரு உத்தேச பட்டியல் சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பாகத் தொலைக்காட்சிகளிலும் விவாதங்கள் நடைபெற்றன.
சென்னையில் இன்று நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்திடம் இது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் கூறிய பிரேமலதா, "தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிகவிற்கு வெறும் 6 இடங்கள் எனத் தவறான தகவல் வெளியிட்ட அந்தக் கட்சிக்கு அழிவுகாலம் ஆரம்பமாகிவிட்டது. அதிகாரப்பூர்வமாக இந்த லிஸ்டை யார் கொடுத்தார்கள்? எதைக் கேட்டு விவாதம் செய்கிறீர்கள்?" என ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.
"தேமுதிக குறித்துச் செய்தி வெளியிடுவதாக இருந்தால் எங்கள் அனுமதி இல்லாமல் போடக்கூடாது. கடைக்கோடியில் இருக்கும் தொண்டர்களின் மனநிலையை எப்போதாவது யோசித்துப் பார்த்தீர்களா?" என ஊடகங்களைக் கடிந்துகொண்டார்.
பியூஸ் கோயல் - இபிஎஸ் சந்திப்பு குறித்துப் பேசிய அவர், அந்தக் கூட்டணியில் உள்ளவர்கள் ஆலோசிப்பதை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றார்.
தங்கள் கட்சியின் கூட்டணி நிலைப்பாடு குறித்துப் பேசிய அவர், "வருகிற ஜனவரி 9-ம் தேதி தேமுதிகவின் பிரம்மாண்ட மாநாடு நடைபெற உள்ளது. அன்று யாருடன் கூட்டணி என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன். மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசித்த பிறகே தெளிவான முடிவு எடுக்கப்படும்," எனத் தெரிவித்தார்.
விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் (குருபூஜை) வரும் டிசம்பர் 28-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், பிரேமலதாவின் இந்த அதிரடிப் பேச்சு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.