அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியை சார்ந்தவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களது முன்னிலையிலேயே வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது என தெரிவித்துள்ள கோவை மாவட்ட ஆட்சியர், வாக்காளர் பட்டியலின் தூய்மையை உறுதி செய்ய இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் படி தொடர் நடவடிக்கை ஆண்டு தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.
பரபரப்பாக நடந்து முடிந்த வாக்குப்பதிவு
நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் கடந்த 19 ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் 69.46% வாக்குகள் பதிவானது. இதில் கோவையில் 64.81% வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்தநிலையில் கோவையில் பல இடங்களில் வாக்குகள் நீக்கப்பட்டுள்ள்தாகவும், குறிப்பாக ஒரு வாக்குச்சாவடியில் 20 வாக்குகள் என கோவை முழுவதும் ஒரு லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டிருப்பதாக அண்ணாமலை தெரிவித்திருந்தார். மேலும் அவர் கூறுகையில், கோவை மக்களவை தொகுதியில் கவுண்டம்பாளையம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட அங்கப்பா பள்ளியில் ஒரே வாக்குச்சாவடியில் 830 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. சுமார்1,353 வாக்குகள் உள்ள இடத்தில் 70 சதவீதம் அளவுக்கு வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
undefined
ஒரு லட்சம் வாக்குகள் நீக்கம்
பல்லடம், சூலூர் என பல இடங்களில் பாரம்பரியமாக பாஜகவுக்கு வாக்கு செலுத்தி வருபவர்களுக்கு நிறைய இடங்களில் வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், மக்களவை தேர்தலில் பெரிய அளவில் திட்டமிட்டு கோவையில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கோவையில் மறு தேர்தல் நடத்தப்படுமா.? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், கோயம்பத்தூர் மாவட்ட வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும், அதனால் அவர்களால் வாக்களிக்க இயலவில்லை என ஊடகங்களில் வெளிவந்த செய்தி தொடர்பான தெளிவாக்கம் பின்வருமாறு :
அரசியல் கட்சி முன்னிலையே வாக்காளர் பட்டியல்
கோயம்பத்தூர் மாவட்டத்தில் 22.01.2024 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 30,81,594 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலை பொறுத்தவரை அக்டோபர் மாதத்தில் வரைவு வாக்காளர் பட்டியலும், அதன் பின்னர் நடைபெறும் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்திற்கு பின்பு, ஜனவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்படுகிறது. ஒவ்வொருமுறை வாக்காளர் பட்டியல், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் வெளியிடப்படும் பொழுதும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியை சார்ந்தவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களது முன்னிலையிலேயே வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் பொழுது, வாக்காளர் பட்டியலில் இளம் வாக்காளர்களை சேர்த்தல், இடம் பெயர்ந்த மற்றும் இறந்த வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்தல் ஆகிய பணிகள் நடைபெறும்.
ஆட்சேபனை தெரிவிக்க வழிவகை
இப்பணியில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் பொருட்டு, வாக்கு சாவடி அலுவலர்கள் மட்டுமன்றி, அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட வாக்கு சாவடி நிலை முகவர்களையும் இப்பணியில் ஈடுபடுத்தி, வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இப்பணியில் அனைத்து நிலைகளிலும், வாக்காளர்கள் தங்களின் ஆட்சேபனையை தெரிவிக்க வழிவகை உள்ளது. இது தவிர, வாக்காளர் பட்டியலின் தூய்மையை உறுதி செய்ய இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் படி தொடர் நடவடிக்கை ஆண்டு தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ளக் கோரி, தேர்தல் ஆணையத்தால், பொதுமக்களுக்கு தொடர் வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.
தேர்தல் ஆணைய வழிகாட்டுதலை பின்பற்றுகிறோம்
எளிய முறையில் வாக்காளர் தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பதை உறுதி செய்து கொள்ள எதுவாக, தேசிய வாக்காளர் சேவை தளம் மூலமாகவும் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமாகவும் பிரத்யேக வசதி ஏற்படுத்தபட்டுள்ளது. எனவே, இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் படி, உரிய நடைமுறைகளை பின்பற்றியே வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது என்பது இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. வாக்காளர்களுக்கு இதில் ஏதேனும் கூடுதல் விபரங்கள் தேவைப்படின் அவர்கள் சம்பந்தப்பட்ட வாக்கு சாவடி நிலைய அலுவலரையோ, வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்தையோ, மாவட்ட தேர்தல் அலுவலகத்தையோ அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வாக்குப்பதிவு 69.46%: தொகுதி வாரியாக முழுமையாக அறிவித்த இந்தியத் தேர்தல் ஆணையம்