
கந்துவட்டி கொடூரர் என்று மதுரை அன்புச் செழியனை சினிமா உலகமே ஒற்றை விரல் காட்டி சுட்டிக் காட்டிப் புலம்பும்போது, ஒற்றை ஆளாய் விரல் நீட்டி அவர் உத்தமர் என்று சான்று கொடுத்திருக்கிறார் இயக்குனர் சீனுராமசாமி.
‛அன்புச் செழியன் உத்தமர்' என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இது குறித்து பரபரப்பாகப் பேசப்பட்ட நிலையில், இப்போது அவரது பக்கத்தில் இருந்து அந்த டிவிட்டர் பதிவு நீக்கப்பட்டிருக்கிறது.
நடிகர் சுப்பிரமணியபுரம் புகழ் சசிகுமாரின் அத்தை மகன் அசோக்குமார் இரு தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் அவர் கந்துவட்டிக்கு பணம் வாங்கியதும், மிரட்டல் காரணத்தால் தான் தற்கொலை செய்து கொள்வதாகவும் அவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அடுத்து, திரையுலகினர் பலரும் அசோக்குமாருக்கு ஆதரவாகவும், கந்து வட்டி அன்புச் செழியனுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வந்தனர். இந் நிலையில் திடீரென இயக்குநர் சீனு ராமசாமி, அன்புச்செழியனுக்கு ஆதரவாக, அவர் உத்தமர் என்ற ரீதியில் கருத்து தெரிவித்திருந்தார். அவர் தனது டுவிட்டர் பதிவில், ‛எம்.ஜி.ஆர்., சிவாஜி போல் இன்றைய நடிகர்கள் இல்லை. அன்பு செழியன் போன்ற உத்தமர்கள் ஏனோ தவறாக சித்தரிக்கப்படுவது வேதனை அளிக்கிறது. நான் நியாயத்தின் பக்கம் நிற்கிறேன்' எனக் கூறியிருந்தார்.
இந்தக் கருத்து சினிமா வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு மிரட்டல் வந்ததா அல்லது, ஜனநாயக நெறிமுறைகளை அனுசரித்து அவருக்கு யாரேனும் உபதேசம் செய்தார்களா என்று தெரியவில்லை... அவரது டிவிட்டர் பதிவில் இருந்து அந்தக் கருத்து நீக்கப்பட்டிருந்தது.