திமுகவுக்கு நியாபகம் இருக்கா? அண்ணாமலை கேள்வி!

By Manikanda Prabu  |  First Published Oct 5, 2023, 9:26 PM IST

அனைத்து வாக்குகளையும் நிறைவேற்றியதாக சொல்லிக்கொள்ளும் திமுகவுக்கு அதன் வாக்குறுதிகள் நியாபகம் இருக்கிறதா என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்


அனைத்து வாக்குகளையும் நிறைவேற்றியதாக சொல்லிக்கொள்ளும் திமுக தன் தேர்தல் வாக்குறுதி எண்களை 177, 181, 311 மறக்கிறதா? மறைக்கிறதா? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிஒல் கூறியிருப்பதாவது: “செல்வர்களின் முன்னே உதவி கேட்கும் எளியவர் பணிவோடு நிற்பது போல, ஆசிரியரிடம் பணிந்து நின்று கற்பவரே சிறந்தவர்; கல்லாதவரோ கடையர்! உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார், கடையரே கல்லா தவர்.   என்று பேசுகிறது திருக்குறள். ஆசிரியர்களிடத்திலே எத்தனை பணிவோடும் மரியாதையோடும் கல்வி கற்க வேண்டும் என்று திருக்குறள் நமக்கு எடுத்துச் சொல்கிறது. 

Tap to resize

Latest Videos

ஆனால் தமிழ் நாட்டிலே போற்றப்பட வேண்டிய ஆசிரியர்கள் எல்லாம் தமிழகஅரசிடம், தங்கள் வாழ்க்கைக்காக, கையேந்திப் போராடும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். கடந்த பத்து நாட்களுக்கும், மேலாக கல்வித்துறை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும், ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிவோடு கேட்டு ஆவன செய்ய மனமில்லாத திமுக அரசு, போராடும் ஆசிரியர்களில், பெண்கள் நூற்றுக்கணக்கான பேர் இருக்கும் இடத்திலே, கழிப்பிட வசதியையும், குடிநீரையும் தடுப்பது, திமுக அரசின் அருவருக்கத்தக்க அராஜக செயலாகும்.

ஆசிரியர் சங்கங்களின் அனைத்து அமைப்புகளும் இதில் பங்கேற்று கோரிக்கைகளை முன்வைத்து போராடி வரும்போது, அதன் முக்கியத்துவத்தை உணராமல், மாநில அரசு பாராமுகமாக இருப்பது துரதிஷ்டவசமானது, வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மூன்று முக்கிய கோரிக்கைகளை ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்துகின்றன. முதலில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் டெட் தேர்வு நடத்தப்பட்டு 2012 ஆம் ஆண்டு வரை அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு விட்டது.: ஆனால் 2013ல் நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை கிடைக்கவில்லை. அரசாணை எண் 252 இன் அடிப்படையிலே சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. அப்போதும் அனைவருக்கும் பணி வழங்கப்படவில்லை. தீடீரென்று  அரசாணை எண் 71 அடிப்படையிலே வெயிட்டேஜ் மதிப்பெண் என்ற முறை புகுத்தப்பட்டது. இது பல முறைகேடுகளுக்கு வழி வகுத்து, தகுதியான பலருக்கு இன்னும் வேலை கிடைக்காமல் இருக்கக் காரணமானது. தன் தவறை உணர்ந்து அரசு அரசாணை எண் 71 வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை விலக்கிக் கொண்டாலும், ஆசிரியர் தேர்வாணையம் நடத்திய டெட்டில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி நியமனம் கிடைக்கவில்லை. இதற்கிடையே புதிய அரசாணை 149ஐ நடைமுறைப்படுத்த அரசு முயற்சிப்பது, நியாயமற்றது. 

அடுத்ததாக இசை ஓவியம் விளையாட்டு போன்றவற்றை சொல்லித் தரும் சிறப்பு ஆசிரியர்களுக்கான ஊதியம் சிக்கலில் இருக்கிறது.  ஏறத்தாழ 16 ஆயிரம் ஆசிரியர்கள், தற்காலிக பணி அடிப்படையில் மட்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே வேலையும், தொகுப்பூதியமாக பத்தாயிரம் ரூபாய் மட்டும் வழங்கப்படுகிறது. இந்தப் பணமும் மத்திய அரசு வழங்கும் கட்டாய கல்வித் திட்டத்தின் நிதியிலிருந்து வழங்கப்படுகிறது சிறப்பு ஆசிரியர்களின் குறைகளை பொறுப்புடன் கேட்காத திமுக அரசு போராடும் ஆசிரியர்களை எல்லாம் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துகிறது. 
 
அடுத்ததாக மிகவும் பரிதாபத்திற்குரியவர்களாக இருப்பவர்கள் இடைநிலை ஆசிரியர்கள் இந்தப் பணியிலே பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 24 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. இதே இடைநிலை ஆசிரியர் பணியிலே பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நாற்பதாயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது.

ஒரே வேலையை செய்யும் இடைநிலை கல்வி ஆசிரியர்களுக்கு எதற்காக சம்பளத்தில் ஏற்றத்தாழ்வு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பை முன்னிறுத்தி போராடும் இடைநிலை ஆசிரியர்கள், இடைக்கால நிவாரணம் கொடுத்தால் கூட போதும், பணிக்குத் திரும்புவோம் என்று மன்றாடி கேட்டுக் கொண்ட பிறகும்கூட, ஆடு மாடுகளைப் போல வலுக்கட்டாயமாக போராடும் களத்தில் இருந்து மாநில அரசு அப்புறப்படுத்தி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

திமுக அரசு சொல்லாத எந்த விஷயங்களையும் புதிதாக செய்யும்படி நாங்கள் எதையும் கேட்கவில்லை கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தல்களிலும் திமுக இந்த மூன்று காரியங்களையும் நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்து இருந்தது.

திமுக தேர்தல் அறிக்கை 181ல் குறிப்பிட்டுள்ளபடி சிறப்பு ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதியையும்,  திமுக தங்கள் தேர்தல் அறிக்கை எண் 177-ல் குறிப்பிட்டது போல தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர்பணி வழங்கப்படும் என்ற வாக்குறுதியையும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் அறிக்கை எண் 311ல் கூறிய வாக்குறுதியையும், நிறைவேற்ற வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்துகிறது.

திமுக, தங்கள் நிலைப்பாட்டை மாற்றாது, டெட் தேர்ச்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் பணி நியமனம் வழங்கி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கி, சிறப்பு ஆசிரியர்களின் ஊதிய வேறுபாட்டைக் களைந்து, ஆசிரியர்களின் மனக்குறைகளை நீக்கி, அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். ஆசிரியர்கள் கோரிக்கை மறுக்கப்பட்டால்., ஆசிரியர்களை எல்லாம் ஒன்று திரட்டி வெகுவிரைவில் மிகப்பெரிய போராட்டத்தை பாரதிய ஜனதா கட்சி முன்னெடுக்க தயாராக இருக்கிறது.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

click me!