
டிஜிபி டிகே ராஜெந்திரன் வரும் 30 ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். புதிய டிஜிபிக்கான அறிவிப்பு வராத நிலையில் மேலும் 6 மாதம் டிஜிபி டிகேஆருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக டிஜிபி டி.கே ராஜேந்திரன் பொறுப்பு டிஜிபியாக பதவி வகித்து வருகிறார். தமிழகத்திற்கு நேரடியாக சட்ட ஒழுங்கு டிஜிபி இல்லை. தற்போது டிஜிபியாக இருக்கும் டிகே.ராஜேந்திரன் உளவுப் பிரிவு டிஜிபியாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் நியமிக்கபட்டவர். கூடுதலாக சட்ட ஒழுங்கு டிஜிபி பொறுப்பை கவனித்து வருகிறார்.
பொதுவாக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக வேண்டுமென்பது தான் ஒவ்வொரு ஐ.பி.எஸ் அதிகாரிகளின் கனவாக இருக்கும். ஆனால், அரசின் ஆதரவு ஆட்சியாளர்களின் நெருக்கம் போன்றவை டிஜிபி பதவிக்கு தகுதியாக எடுத்துகொள்ளப்படுகிறது. முதல் மூன்று சீனியர் அதிகாரிகள் பேனலில் உள்ளவருக்கே சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவி வழங்கப்பட வேண்டும்.
ஆனால் மூன்று சீனியர் அதிகாரிகள் பட்டியலில் உள்ளவர் அரசுக்கு ஆகாதவராக இருந்தால் அவருக்கு பதிலாக நான்காம் ஐந்தாம் இடத்தில் உள்ளவர்களை உளவுத்துறை டிஜிபியாக நியமித்து கூடுதலாக சட்ட ஒழுங்கை கவனிக்க சொல்லி ஆளுகின்ற முதல்வர்கள் தங்களுக்கு ஏற்ற அதிகாரிகளை வைத்து கொள்வார்கள்.
கடந்த முறை முதல் மூன்று சீனியர் அதிகாரிகள் பட்டியலில் அர்ச்சனா ராமசுந்தரம், மகேந்திரன், சேகர், உள்ளிட்டோர் இருக்க இவர்களுக்கு ஜூனியரான டிகே ராஜேந்திரனை உள்வுத்துறை டிஜிபியாக நியமித்து கூடுதலாக சட்டம் ஒழுங்கு பொறுப்பை கொடுத்தார் ஜெயலலிதா.
தற்போது முதல்வர் எடப்பாடிக்கும் டி.கே.ராஜேந்திரன் நெருக்கமாக இருப்பதாலும் அர்ச்சனா ராமசுந்தரம், மகேந்திரன், ராதாகிருஷ்ணன் போன்றோர் தமிழக அரசுக்கு நெருக்கம் இல்லாத நிலையில் சட்ட ஒழுங்கு டிஜிபி பதவியை இவர்கள் மூவரில் ஒருவருக்கு கொடுத்தால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவர் சட்ட ஒழுங்கு டிஜிபியாக நீடிப்பார்.
அப்படி வருபவர் அரசுக்கு இணங்கி நடக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. தற்போது இருக்கும் மூன்று சீனியர் அதிகாரிகளும் இனக்கமாக இல்லாததால் இவர்களை நியமிக்க வாய்ப்பில்லை.
அர்ச்சனா ராமசுந்தரம், ராதாகிருஷ்ணன், தற்போதைய டிஜிபி டிகே ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்டோர் வரும் சில மாதங்களில் ஓய்வு பெற்று விடுகின்றனர்.
பின்னர், மீதம் நிற்பது மகேந்திரன் ஒருவர் மட்டுமே. இதன் பின்னர், புதிதாக ஐந்து டிஜிபிக்கள் பதவி உயர்வு மூலம் வருவார்கள். அதில் ஒருவரை சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கும் வரை இடைப்பட்ட காலத்திற்கு தற்போது உள்ள பொறுப்பு டிஜிபி டிகே ராஜேந்திரனையே தொடர வைக்க வேண்டும் என எடப்பாடி அரசு நினைப்பதால் அதற்கு தோதாக வரும் 30 ஆம் தேதி பதவி ஓய்வு பெறும் டிகே ராஜேந்திரனுக்கு மேலும் 6 மாத காலம் பணி நீட்டிப்பு செய்ய எடப்பாடி அரசு உத்தேசித்துள்ளதாக தெரிகிறது.
இதற்கான கடிதம் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்ப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே கூடிய விரைவில் டிகே ராஜேந்திரனுக்கு பணி நீட்டிப்பு ஆணை வரலாம்.