
கடந்த சில நாட்களாகவே தமிழகம் எங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் விஷயம்தான் ஜாபர் சாதிக் என்பவரின் போதைப் பொருள் கடத்தல் விஷயம். டெல்லியில் உள்ள மத்திய போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் மேற்கு டெல்லியில் கைலாஷ் பார்க் என்ற பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு குடோனில் சில நாட்களுக்கு முன்பு அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது சுமார் 2000 கோடி மதிப்பில் உள்ள 50 கிலோ ரசாயன பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு உடந்தையாக மற்றும் மூளையாக செயல்பட்டு வந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும், திமுகவின் முன்னாள் மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராகவும் இருந்த ஜாபர் சாதிக் அவர்களை விசாரிக்க மத்திய போலீசார் படை தமிழகம் விரைந்தனர்.
அப்போது அவர் தலைமறைவானார், பல நாட்களாக அவரை போலீசார் தேடி வரும் நிலையில், அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல அவர் டிஜிபி சங்கர் ஜிவாலுடன் உள்ள புகைப்படம் ஒன்று வெளியானது. அதில் டிஜிபி சங்கர் ஜிவால், சாதிக்கிற்கு விருது வழங்குவது போன்ற ஒரு புகைப்படம் வைரலானது.
இந்நிலையில் இது குறித்து தனது தரப்பு விளக்கத்தை கொடுத்துள்ள அவர் "ஜாபர் சாதிக் மீது 26 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், ஜாபர் சாதிக்கிற்கு தான் கொடுத்தது விருது அல்ல, அது வெறும் பரிசு பொருள் தான் என்றும் கூறியிருக்கிறார். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தேடப்படும் சாதிக் சென்னை மாநகர காவல் ஆணையராக தான் இருந்த பொழுது 10 சிசிடிவி கேமராக்களை ஸ்பான்சர் செய்ததாகவும், அவர் குற்றவாளி என்று தெரிந்த பொழுது அந்த கேமராக்களை தற்போது அகற்றி விட்டதாகவும் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.