
விமான சேவைகளில் ஏற்பட்ட தாமதங்களைத் தொடர்ந்து, விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) வியாழக்கிழமை இண்டிகோ உயர்மட்ட அதிகாரிகளுடன் விரிவான ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தியது. 2025 நவம்பர் இறுதி வாரத்திலிருந்து இண்டிகோ நெட்வொர்க்கில் பதிவான செயல்பாட்டு இடையூறுகளே இந்தக் கூட்டத்துக்குக் காரணமாக அமைந்தது.
அதிர்ச்சியூட்டும் விமான ரத்துகள்
இந்த ஆய்வில் அதிகாரிகள் பகிர்ந்ததாவது, இண்டிகோ ஒரு நாளில் சராசரியாக 170–200 விமானங்களை ரத்து செய்தது செய்து வருகிறது. இது சாதாரணத்தை விட பல மடங்கு அதிகம். நாடு முழுவதும் விமான சேவை ரத்துகள் அதிகரிக்க, பல விமான நிலையங்களில் பயணிகள் குழப்பம் மற்றும் அதிருப்தி வெளியிடப்பட்டது.
பணியாளர் திட்டமிடல் தோல்வி
DGCA ஆய்வில் சில முக்கியமான காரணங்கள் கண்டறியப்பட்டன. திருத்தப்பட்ட FDTL (பணிநேர வரம்பு) விதிமுறைகளை செயல்படுத்தும் போது ஏற்பட்ட சிரமங்கள், குளிர்கால இயக்கத்தால் ஏற்படும் கூடுதல் சவால்கள் ஆகியவை ஆகும்.
இண்டிகோ மன்னிப்பு
பணியாளர் தேவையை கணிக்க தவறியது என்பதை இண்டிகோ நேரடியாக ஒப்புக்கொண்டது. இதனால் அதிகமான இரவு நேர சேவைகள் இயக்கப்படாமல் போயின. ஆகவே, பிப்ரவரி 10, 2026 வரை A320 விமானங்களுக்கு குறிப்பிட்ட FDTL விதிகளிலிருந்து விலக்கு வழங்குமாறு நிறுவனம் DGCA-விடம் கோரியுள்ளது. விமான நிலையங்களில் பல பயணிகள் சிக்கி அவதிக்குள்ளாகினர். இதையடுத்து, இண்டிகோ வெளியிட்ட அறிவிப்பில் “எங்கள் பயணிகளிடம் மனமார்ந்த மன்னிப்பு கோருகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் புது சர்ச்சை
நெருக்கடி நிலை தொடரும் நிலையில், சென்னை விமான நிலையத்தில் புதிய விவாதம் எழுந்துள்ளது. அதிகாரப்பூர்வ தகவலின்படி, இண்டிகோ நிறுவனம் CISF-க்கு “ஒரு பயணியை கூட அனுமதிக்க வேண்டாம்” என கடிதம் அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பாதுகாப்பு, நெருக்கடியை கட்டுப்படுத்துதல், பயணிகள் நுழைவு மேற்பார்வை என பல நிலைகளில் விவாதத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே செயல்பாடு நெருக்கடியில் இருக்கும் நிலையில், இந்த புதிய நடவடிக்கை விமான நிறுவனத்துக்கும் பயணிகளுக்கும் கூடுதல் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.