தற்கொலைக்கு டெங்கு மட்டுமே காரணமல்ல! விசாரணை நடத்தப்படும் என அதிகாரி தகவல்!

First Published Oct 3, 2017, 3:36 PM IST
Highlights
Dengue is not the only cause of suicide


குழந்தையுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், தற்கொலை செய்து கொள்வதற்கு டெங்கு மட்டுமே காரணம் அல்ல என்றும், அவர்கள் இறப்புக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கலாம் என்றும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பேளுக்குறிச்சி காமாட்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி அன்புக்கொடி. இவர்களுக்கு சர்வீன் என்ற 6 மாத ஆண் குழந்தை இருந்தது. 

இவர்களுக்கு திருமணமாகி கடந்த 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்ததாகவும், தற்போது ஆண் குழந்தை பிறந்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் அந்த குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவனை உடனே சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக கூறினர். இதனை அடுத்து, பெரியசாமி தன் மனைவி குழந்தையுடன் நேற்று இரவு வீடு திரும்பினர்.

வீட்டுக்கு வந்த அன்புக்கொடி, குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது குறித்து வேதனையுடன் காணப்பட்டார். இந்த நிலையில், இன்று காலையில், அருகில் உள்ள கிணற்றில் அன்புக்கொடி தனது குழந்தையுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

கிணற்றில், அன்புக்கொடி மற்றும் குழந்தை பிணமாக இருப்பதைப் பார்த்தவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தன் மகனுக்கு டெங்கு காய்ச்ச்ல இருப்பதாக மருத்துவர்கள் கூறியதால் வேதனையுடன் காணப்பட்ட அன்புக்கொடி குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அன்புக்கொடி, டெங்குவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் வேளையில், தற்கொலை செய்து கொள்வதற்கு டெங்கு மட்டுமே காரணமாக இருக்க முடியாது என்றும் இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாகவும், சுகாதார துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

click me!