
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சென்னை மாநகரிலும் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் அதிவேகமாக பரவிவருகிறது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பெரும்பாலும் குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் டெங்கு பரவுவதற்கு அதிகாரிகள் கூறிய காரணம் பெரும் அதிர்ச்சியையும் சிரிப்பையும் ஏற்படுத்துகிறது.
சென்னையில் டெங்கு பரவுவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் அளித்த விளக்கம்:
சென்னையில் டெங்குவைத் தடுக்க கடந்த 10 ஆண்டுகளாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே டெங்குவைப் பரப்பும் சென்னை நகர ஏடிஎஸ் கொசுக்களுக்கு வீரியம் கிடையாது. அதேவேளையில், மதுரை, சேலம் போன்ற நகரங்களில் டெங்குவைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. எனவே அங்குள்ள கொசுக்களுக்கு டெங்குவை பரப்பும் வீரியம் அதிகம். மதுரை, சேலம் போன்ற நகரங்களில் உள்ள கொசுக்கள், சென்னைக்கு வரும் குளிர்சாதனப்பெட்டி வசதி கொண்ட ஆம்னி பேருந்துகளில் சென்னைக்கு வந்து டெங்குவைப் பரப்புகின்றன.
இவ்வாறு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். சென்னையில் டெங்குவைப் பரப்பும் கொசுக்களுக்கு வீரியம் இல்லையாம்.. மதுரையிலும் சேலத்திலும் இருந்துதான் கொசுக்கள் பஸ் பிடித்து சென்னைக்கு வருகிறதாம்.. அதுவும் ஆம்னி பஸ்... என்ன விளக்கம் இதெல்லாம்... இப்படிப்பட்ட விளக்கத்தை எல்லாம் கொடுக்க உட்கார்ந்து யோசிப்பாங்களோ? என மக்கள் நகைச்சுவையாக கேள்வி எழுப்புகின்றனர்.