
ராசிபுரம் அருகே 6 மாத கைக்குழந்தைக்கு டெங்கு அறிகுறி இருந்ததால் தாய் குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பேளக்குறிச்சி காமாட்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி அன்பு கொடி. இந்த தம்பதிக்கு சர்வீன் என்ற 6 மாத ஆண் குழந்தையும் இருந்தது.
இந்நிலையில் அந்த குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவனை உடனே சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அப்போது குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக தெரிகிறது. பின்னர் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு நேற்று இரவு வீடு திரும்பினர்.
குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதையறிந்த தாய் அன்புக்கொடி மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் பேளூக்குறிச்சி மாரியம்மன் கோவில் அருகே உள்ள கிணற்றில் தனது கைக்குழந்தையுடன் அன்புக்கொடி குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
அதிகாலையில் அந்த வழியாக சென்றவர்கள் கிணற்றில் குழந்தையும், அன்புக்கொடியும் பிணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சியுற்றனர்.
பின்னர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் அன்புக்கொடியின் கணவர் பெரியசாமி மற்றும் உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.