
அண்மைக் காலமாக ரஜினி மற்றும் கமல் ஆகியோரின் அரசியல் பிரவேசம் தீவிரமடைந்துள்ளது. அரசியல் கட்சி தொடங்கி நேரடி அரசியலில் முதலில் களமிறங்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ரஜினி மற்றும் கமலின் ரசிகர்கள், தங்களின் தலைவர் கட்சி ஆரம்பித்து விடுவாரா என்ற எதிர்பார்ப்பிலும் தங்கள் தலைவர் தான் முதலில் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்றும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
அண்மையில் ரஜினியை சந்தித்த கமல், அரசியலில் தன்னுடன் இணைந்து செயல்படுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில், கடந்த ஒன்றாம் தேதி நடந்த சிவாஜி கணேசன் மணிமண்டப திறப்பு விழாவில் பேசிய ரஜினிகாந்த், அரசியலில் வெல்வதற்கு சினிமா புகழ், பெயர் மட்டும் போதாது என பேசினார். கமலை குறிப்பிட்டுத்தான் ரஜினி அப்படி பேசினார் என அரசியல் விமர்சகர்களும் நடுநிலையாளர்களும் கருத்து தெரிவித்து வந்தனர்.
ரஜினியின் பேச்சு குறித்து ஒரு மாபெரும் விவாதமே நடந்தேறியது. ரஜினியின் பேச்சு, கமலை மட்டுமல்லாது கமலின் ரசிகர்களையும் ஆதரவாளர்களையும் அதிருப்தியில் ஆழ்த்தியதாகவும் விவாதப் பொருளாக மாறியிருப்பதாகவும் ரஜினிக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அன்று இரவே கமலுக்கு போன் செய்த ரஜினி, என்னுடைய பேச்சு உங்கள் மனதை காயப்படுத்திவிட்டதாக கூறுகிறார்களே? என கேட்டுள்ளார். மேலும் தான் மனதில் பட்டதையே பேசியதாகவும் எந்தவிதமான உள்ளர்த்தம் கற்பிக்கும் வகையில் பேசவில்லை எனவும் ரஜினி விளக்கமளித்துள்ளார்.
அதற்கு, யாரோ உங்களிடம் தவறாக கூறியிருக்கிறார்கள் என கமல் தெரிவித்துள்ளார். எனக்கு எந்த வருத்தமும் இல்லை.. அதுவும் இல்லாமல் நீங்கள் வருத்தப்படும் அளவுக்கு எதுவும் பேசவில்லையே.. என கமல் தெரிவித்துள்ளார்.
ரஜினி மீது வருத்தமில்லை என கமல் தெரிவித்தபோதிலும் கமல் வருத்தப்பட்டார் என்பதை, அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் பதிவிட்ட டுவிட்டர் பதிவின் மூலம் அறியலாம்.
ரஜினி போன் செய்த அடுத்த சில நிமிடங்களில் தனது டுவிட்டர் பக்கத்தில் கமல் ஒரு பதிவிட்டார்.
அந்த பதிவில், முதலில் உங்களை நிராகரிப்பார்கள்.. பின்னர் உங்களைப் பார்த்து சிரிப்பார்கள்.. தொடர்ந்து போராடினால் இறுதியில் வெற்றிபெறலாம் என பதிவிட்டிருந்தார்.
கமலின் இந்த பதிவு, ரஜினியின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமானதாகவே கருதப்படுகிறது.