
பெரம்பலூர்
மாட்டிறைச்சி தடைச் சட்டத்தை திரும்ப பெற வேண்டி பெரம்பலூரில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலை எதிரே, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் இரா.சங்கர் தலைமைத் தாங்கினார். மாவட்டச் செயலர் சா.காப்பியன், மாவட்டத் துணைத் தலைவர் மு.முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் வீ.ஞானசேகரன், மாவட்டச் சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் பி.காமராஜ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், “மாட்டிறைச்சி தடைச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.
தனி மனிதன் உண்ணும் உணவு உரிமையில் தலையிடக்கூடாது.
பசுவதை தடுப்புச் சட்டத்தில் செய்துள்ள விதி திருத்தங்களை திரும்ப பெற வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதில், நிர்வாகிகள் புலவர் செம்பியன், செந்தமிழ்லேந்தன், இ.தாஹீர்பாட்ஷா, நா.தியாகராஜன், ஆ.தங்கவேல், கற்பனைபித்தன், வி.ஜெயராமன், வழக்குரைஞர் துரை.தாமோதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.