
பெரம்பலூர்
பெரம்பலூரில் டாஸ்மாக் சாராயக் கடையின் பூட்டை உடைத்து ரூ.32 ஆயிரம் மற்றும் 300 சாராய புட்டிகளைத் திருடிய சிறுவர்கள் மூவரை காவலாளர்கள் கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா ஆலத்தூர் கேட்டில் டாஸ்மாக் சாராயக் கடை ஒன்று உள்ளது. இக்கடையில் விற்பனையாளராக பிரகாஷ் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் சனிக்கிழமை இரவு வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு பிரகாஷ் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
மறுநாள் வந்து பார்த்தபோது சாராயக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார் பிரகாஷ்.
டாஸ்மாக் சாராயக் கடையின் பூட்டை உடைத்து ரூ.32 ஆயிரம் மதிப்புள்ள 300-க்கும் மேற்பட்ட சாராய புட்டிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பதை அறிந்த பிரகாஷ் பாடாலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த காவலாளர்கள் நேற்று பெரம்பலூர் அருகே உள்ள துறைமங்கலம் ஏரிக்கரையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு சந்தேகப்படும்படி மூன்று சிறுவர்கள் நின்றக் கொண்டிருந்ததையடுத்து காவலாளர்கள் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர்கள் துறைமங்கலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், ஆலத்தூர்கேட்டில் உள்ள டாஸ்மாக் சாராயக் கடையில் சாராய புட்டிகளைத் திருடியதும் இவர்கள் தான் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து காவலாளர்கள் அந்த மூன்று சிறுவர்களையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சாராய புட்டிகளையும் காவலாளர்கள் பறிமுதல் செய்தனர்.