
தஞ்சாவூர்
தஞ்சாவூரில், விவசாய கடனை வசூலிக்க அடியாள்களை அனுப்பும் வங்கிகளை கண்டித்து காவிரி உரிமை மீட்புக் குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாய கடனை வசூலிக்க அடியாள்களை அனுப்புவதைக் கண்டித்து காவிரி உரிமை மீட்புக் குழுவினர் தஞ்சாவூர் மாவட்டம், இரயிலடியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் த.மணிமொழியன் தலைமைத் தாங்கினார்.
இதில், கடந்த 4-ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு போந்தை கிராமத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்ற விவசாயியிடம் டிராக்டர் கடன் வசூல் செய்வதற்காக தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்று தனது அலுவலர்களுடன், அடியாள்களை அனுப்பி வைத்தது. அந்த அடியாள்கள் தாக்கியதில் விவசாயி ஞானசேகரன் உயிரிழந்தார்.
"நீதிமன்ற ஆணையை மதிக்காமல் அடியாள்களைக் கொண்டு கடன் வசூல் என்ற பெயரில் விவசாயியைத் தாக்கி உயிரிழக்கச் செய்த வங்கி அலுவலர்கள் மற்றும் தாக்குதல் நடத்திய அடியாள்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உயிரிழந்த விவசாயி குடும்பத்தினருக்கு ரூ.25 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்கக் கூடாது" என்பன போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மேலும், "விவசாயி மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்தும்,
விவசாய விளைபொருள்களுக்கு உரிய விலை நிர்ணயிக்கக் கோரியும்,
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு உரிய உத்தரவாதம் அளிக்க வேண்டும்" என்று வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசன், தமிழ் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் சி. முருகேசன், இந்திய ஜனநாயகக் கட்சியின் மாவட்டத் தலைவர் சிமியோன் சேவியர் ராசு, தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் மாவட்டத் தலைவர் நா. வைகறை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.