
தருமபுரி
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பா.ம.க.வினர் தங்கள்து வீடுகள் மற்றும் கடைகளில் கருப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிவடைந்துவிட்ட நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனைக் கண்டித்து தருமபுரி மாவட்ட பா.ம.க. சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடைபெற்றது.
தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, நல்லம்பள்ளி, அதியமான்கோட்டை, சாமிசெட்டிப்பட்டி, ஏலகிரி, குரும்பட்டி, காரிமங்கலம், அரூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், கம்பைநல்லூர், ஏரியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகள், கடைகளில் கருப்புக்கொடியேற்றி மத்திய அரசுக்கு பா.ம.க.வினர் கண்டனம் தெரிவித்தனர்.
இதனொரு பகுதியாக தருமபுரி நகரில் பல்வேறு இடங்களில் வீடுகள் மற்றும் கடைகளில் கருப்புக்கொடி ஏற்றி பா.ம.க.வினர் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
பென்னாகரம் சாலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க. மாநில துணைபொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் சண்முகம், மாநில இளைஞர் சங்க செயலாளர் முருகசாமி, மாவட்ட நிர்வாகிகள் டி.ஜி.மணி, சுப்பிரமணியன், சின்னசாமி மற்றும் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கருப்புக் கொடிகளுடன் பங்கேற்றனர்.