
சேலம்
தமிழக மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை மத்திய, மாநில அரசுகள் பெற்றுத் தரவேண்டி சேலம் மாவட்ட ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்ட ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சேலம் தலைமை தபால் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திராவிடர் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் பழனி.புள்ளையண்ணன் தலைமை தாங்கினார். சேலம் மண்டலத் தலைவர் சுப்பிரமணியன் வரவேற்றுப் பேசினார். சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா, சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயப்பிரகாஷ், மேற்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஏ.ஏ.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது நிர்வாகிகள் பேசியது:
“நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு உறுதியான நிலைப்பாடு இல்லாத வகையில் செயல்பட்டு வருகிறது. தங்களது பதவியை தக்கவைத்து கொள்ள தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களின் எதிர்காலத்தை அடகு வைத்து விட்டது. அவர்களது கல்வி, வேலைவாய்ப்பை இழக்கும் நிலைக்கு தள்ளி விட்டது.
எனவே, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்.
தமிழக மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்,
இது தொடர்பாக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை மத்திய, மாநில அரசுகள் பெற்றுத்தர வேண்டும். என்று அவர்கள் பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலம் மத்திய மாவட்ட அவைத் தலைவர் கலையமுதன், மாநகர தி.மு.க. செயலாளர் ஜெயக்குமார், முன்னாள் மேயர் ரேகாபிரியதர்ஷினி, காங்கிரஸ் சார்பில் பச்சப்பட்டி பழனிசாமி, சஞ்சய்காந்தி, மெடிக்கல் பிரபு, சாரதாதேவி, விடுதலை சிறுத்தை மாநில நிர்வாகி இமயவரம்பன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.