கடன்களை பாகுபாடின்றி தள்ளுபடி செய்ய வேண்டும் -  விவசாயிகள் சங்கத்தினர் தீர்மானம்...

First Published Jun 13, 2018, 9:55 AM IST
Highlights
Debts should cancel without discrimination - Farmers Association Resolution ...


தருமபுரி
 
அனைத்து விவசாயிகள் பெற்றுள்ள கூட்டுறவு கடன்களை பாகுபாடு இல்லாமல் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

தமிழக விவசாயிகள் சங்கத்தின் தர்மபுரி மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் தர்மபுரியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் செங்கோடன் தலைமை வகித்தார். 

மாவட்ட செயலாளர் சக்திவேல், மாவட்ட பொருளாளர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க மாநில தலைவர் எஸ்.ஏ. சின்னசாமி கூட்டத்தில் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். 

இதில், "தர்மபுரியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் அறிவித்தபடி எண்ணேகொல்புதூர் கால்வாய்த்திட்டம், தூள்செட்டி ஏரி கால்வாய்த்திட்டம், நல்லம்பள்ளி கோம்பை மாரியம்மன் கோவில் அணை திட்டம் ஆகியவற்றிற்கு நிதி ஒதுக்கீடு செய்து திட்ட பணிகளை தொடங்க வேண்டும். 

தேசிய நதிநீர் இணைப்பு திட்டத்தை காலதாமதமின்றி தொடங்க வேண்டும். 

அனைத்து விவசாயிகள் பெற்றுள்ள கூட்டுறவு கடன்களை பாகுபாடு இல்லாமல் தள்ளுபடி செய்ய வேண்டும். 

அரசு திட்டங்களுக்கும், தனியார் திட்டங்களுக்கும் விவசாய விளைநிலங்களை கையகப்படுத்தும்போது விவசாயிகளிடம் முறையாக கருத்து கேட்டு உரிய ஒப்புதலை பெற்ற பின்னரே பணிகளை மேற்கொள்ள வேண்டும்" உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் சங்க மாவட்ட நிர்வாகிகள் அண்ணாமலை, சுப்பிரமணி, சிவலிங்கம், லோகநாதன், நாகராஜ் உள்பட விவசாயிகள் திரளாக பங்கேற்றனர்.

click me!