Sun Network: மாறன் குடும்பத்தில் பிளவு? கலாநிதிக்கு எதிராக தயாநிதி நோட்டீஸ்! சன் நெட்வொர்க் வெளியிட்ட பரபரப்பு விளக்கம்!

Published : Jun 20, 2025, 03:41 PM IST
dayanidhi maran

சுருக்கம்

தனது அண்ணன் கலாநிதி மாறன் உட்பட 8 பேருக்கு எதிராக சன் குழும பங்குகளை மோசடியாக மாற்றியதாக தயாநிதி மாறன் குற்றம் சாட்டியுள்ளார். பங்குகளைத் திருப்பித் தராவிட்டால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரித்துள்ளார். சன் டிவி இதனை மறுத்துள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக மக்களவை தொகுதி எம்.பி.யுமான தயாநிதி மாறன், தனது அண்ணன் கலாநிதி மாறன், மனைவி காவேரி கலாநிதி உட்பட 8 பேருக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், சன் டிவி குழும பங்குகளை கலாநிதி மாறன் ஊடகக் குழுமம் மற்றும் இணைப்பு நிறுவனங்களில் பெரிய அளவிலான மோசடியாக தனக்கு மாற்றிக்கொண்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

தயாநிதி மாறன் குற்றச்சாட்டு

அதாவது தனது தந்தை முரசொலி மாறன் மரணத்துக்குப் பிறகு அவரது பெயரில் இருந்த 95,000 பங்குகள் சட்டபூர்வ வாரிசு சான்றிதழ் அல்லது இறப்பு சான்றிதழ் இல்லாமல் தனது தாயார் மல்லிகா மாறனுக்கு மாற்றப்பட்டதாகவும் பின்னர் இவை மற்ற சட்டபூர்வ வாரிசுகளைத் தவிர்த்து கலாநிதி மாறனுக்கு விற்கப்பட்டதாகவும் புகார் தெரிவித்துள்ளார். மேலும் குங்குமம் பப்ளிகேஷன்ஸ், கல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் மற்றும் சன் குழுமத்துடன் தொடர்புடைய பிற நிறுவனங்களிலும் இதேபோன்ற மோசடி பரிமாற்றங்கள் நடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஒரு வாரத்திற்குள் பங்குகளைத் திருப்பித் தராவிட்டால், சம்பந்தப்பட்ட மத்திய துறைகளிடம் புகார் அளித்து சன் குழும வணிகங்களை நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் என சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்று தயாநிதி மாறன் எச்சரித்துள்ளார்.

சன் டிவி நெட்வொர்க் கடிதம்

இந்நிலையில் சன்.டி.வி. நிறுவனத்திற்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் இடையே பிரச்னை என செய்திகள் வெளியான நிலையில் மும்பை பங்குச்சந்தை தேசிய பங்குச்சந்தை நிர்வாகத்திற்கு சன் டிவி நெட்வொர்க் கடிதம் எழுதியுள்ளது. இதுதொடர்பாக சன் டிவி நெட்வொர்க் அளித்துள்ள விளக்கத்தில்: சன் டிவி நெட்வொர்க் லிமிடெட் நிறுவனத்தின் பங்குதாரருக்கும் அவரது குடும்ப உறுப்பினருக்கும் இடையிலான சில விஷயங்கள் தொடர்பாக பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. 22 ஆண்டுக்கு முன்பு பிரைவேட் லிமிடெட் ஆக இருந்தபோது இந்த பிரச்னை ஏற்பட்டதாகவும், அதற்கும் தற்போதைய நிகழ்வுக்கும் சம்பந்தமில்லை என்றும் கூறப்பட்டிருக்கிறது.

அவதூறானவை, ஆதாரமற்றவை

செய்திகள் தவறானவை, ஊகத்தின் அடிப்படையிலானவை, அவதூறானவை, ஆதாரமற்றவை. நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளும் சட்டப்பூர்வ கடமைகளின்படி செய்யப்பட்டுள்ளன என்பதையும், பொது வெளியீட்டிற்கு முன்னர் சம்பந்தப்பட்ட இடைத்தரகர்களால் அவை முறையாக சரிபார்க்கப்பட்டுள்ளன என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஊடக செய்தியில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் நிறுவனத்தின் வணிகத்திலோ அல்லது அதன் அன்றாட செயல்பாடுகளிலோ எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இது குடும்ப விவகாரம் மட்டுமே. தற்போதுள்ள பிரச்சனைக்கும் வர்த்தகத்துக்கும் தொடர்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகம் முழுவதும் நாளை முக்கிய இடங்களில் மின்தடை! எத்தனை மணி நேரம் தெரியுமா?
ஆடு வெட்டி புது சடங்கு உருவாக்கினது தான் பிரச்சனைக்கு காரணமே..! திருப்பரங்குன்றம் பின்னணியின் உண்மை உடைக்கும் திமுக எம்.பி தங்க தமிழ்ச்செல்வன்..!