
திருவண்ணாமலை
ஆரணியில் சாலை விதிமீறல்களால் ஏற்படும் ஆபத்துகளை உணர்த்தும் வகையில் நாடகக் கலைஞர்களை வைத்து விழிப்புணர்வு நாடகம் நடத்தினர் காவல்துறையினர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெரினாபேகம் தலைமையில், ஆய்வாளர்கள் விநாயகமூர்த்தி, சாலமன்ராஜா ஆகியோர் முன்னிலையில், நாடக கலைஞர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து நாடகங்களை நடத்தினர்.
இந்த நாடகத்தில், தலைக்கவசம் அணியாமல் சென்றால் ஏற்படும் விபரீதம், சிறிய ரக லாரியில் மக்கள் அதிகமானோர் பயணம் செய்வதால் ஏற்படும் ஆபத்து போன்ற விதிமீறல்களால் ஏற்படும் ஆபத்தை குறித்து நாடகமாக நடித்துக் காட்டினர்.
ஆரணி பழைய பேருந்து நிலையம், மணிக்கூண்டு, புதிய பேருந்து நிலையம், அண்ணா சிலை ஆகிய பகுதிகளில் இந்த நாடகங்கள் நடத்தப்பட்டன.
ஏராளமான மக்களும் இந்த நாடகங்களை கண்டு ரசித்தனர். மக்களிடையே சாலை விதிமீறல்கள் தவறு என்பதை உணர்த்தும் வகையில் போடப்பட்ட இந்த நாடகங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், மக்களை கவரும் விதமாகவும் இருந்தது.