
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமாறன். இவரது மகள் வர்ஷா(13). இவர், தனியார் நிதி உதவி பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று காலை சைக்கிளில் பள்ளிக்கு சென்றார். புதூர் ரயில்வே கேட் பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது சைக்கிள் தண்டவாளத்தில் சிக்கிக்கொண்டது.
சைக்கிளை எடுக்க மாணவி முயன்றபோது சென்னையில் இருந்து மைசூர் நோக்கி சதாப்தி எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் வேகமாக வந்து கொண்டிருந்தது.
அப்போது இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் விரைந்து சென்று மாணவியை அலேக்காக தூக்கி மீட்டனர். மாணவியை மீட்ட சில நொடிகளில் ரயில், அந்த இடத்தை கடந்தது. இதில் சைக்கிள் மற்றும் பள்ளி பேக், என்ஜினில் சிக்கி சின்னாபின்னமானது.
ரயிலில் சைக்கிள் சிக்கி சிறிது தூரம் இழுத்து சென்றது. அந்த சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். இதையடுத்து, ரயில்வே ஊழியர்கள் வந்து, ரயிலில் சிக்கி இருந்த சைக்கிளை எடுத்தனர். இதனால் 15 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.
நல்ல வேலையாக மாணவியின் உயிர் காப்பாற்றப்பட்டது.தலைக்கு வந்தது தலப்பாவோட போச்சி என்ற பழமொழிக்கு ஏற்ப, சைக்கிள் மட்டுமே விபத்தில் சிக்கியது