
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரரறிவாளனை பரோலில் விடுவப்பது தொடர்பாக அரசு வழக்கறிஞருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனை பரோலில் விடுதலை செய்ய வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக சட்டப் பேரவையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனால் அவருக்கு இது வரை பரோல் வழங்கப்படவில்லை என்பதால் இப்பிரச்சனையை அ.தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்களான கருணாஸ், தனியரசு, தமிமுன்அன்சாரி ஆகியயோர் கையில் எடுத்துள்ளனர்.
பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வர அவர்கள் சபாநாயகரிடம் மனு அளித்தனர்.
இது குறித்து சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினையும் இந்த மூவர் கூட்டணி சந்தித்துப் பேசியது. இதையடுத்த மு.க.ஸ்டாலினும் சட்டப் பேரவையில் இது குறித்த பேசினார்.
ஸ்டாலினுக்கு பதில் அளித்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பேரறிவாளனை பரோலில் விடுவது பற்றிய பிரச்சனை பரிசீலனையில் உள்ளது என தெரிவித்தார். இதையடுத்து பல நாட்களாக இப்பிரச்சனை கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்பிரச்சனை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனை பரோலில் விடுவிப்பது தொடர்பாக அரசு வழக்கறிஞருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.