கள்ளக்குறிச்சி மாணவியின் இறுதி சடங்கில் பின்பற்றவேண்டிய வழிமுறைகள் குறித்து கடலூர் மாவட்ட எஸ்பி சக்தி கணேசன் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாணவியின் இறுதி சடங்கில் பின்பற்றவேண்டிய வழிமுறைகள் குறித்து கடலூர் மாவட்ட எஸ்பி சக்தி கணேசன் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துக்கொண்டார். அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. அந்த போராட்டம் கலவரமாக மாறியது. அப்போது அந்தப் பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டது. இதுக்குறித்த வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் உயிரிழந்த மாணவியின் உடல் இரண்டு முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை அவரது உடலை அவரது பெற்றோர்கள் பெற்றுக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. மாணவி தங்கியிருந்த பள்ளியின் விடுதி குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்..
அவரது உடலைப் பெற்றோர்கள் பெற்றுக் கொண்டால் அவரது உடலுக்கு சொந்த ஊரான பெரிய நெசலூர் கிராமத்தில் இறுதி சடங்கு செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், மாணவியின் இறுதி சடங்கில் பின்பற்றவேண்டிய வழிமுறைகள் குறித்து கடலூர் மாவட்ட எஸ்பி சக்தி கணேசன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது அறிவிப்பில், மாணவியின் இறுதி சடங்கில் அவரது உறவினர்களும் பொதுமக்களும் அமைதியாக கலந்து கொள்ளலாம். தேவையற்ற இடங்களில் கூட்டம் கூட கூடாது. தேவையில்லாத தகவல்களை வதந்தியாக பரப்பக் கூடாது. பெரிய நெசலூர் கிராமத்தை சுற்றி பன்னிரண்டு இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ.. எச்சரிக்கை விடுத்த காவல்துறை
நானூறுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அமைதியான முறையில் இறுதி சடங்கு செய்ய அனைத்து விதமான ஏற்பாடுகளையும் பாதுகாப்புகளையும் காவல்துறை மூலம் செய்யப்பட்டுள்ளது. எனவே இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். காவல்துறை எச்சரிக்கை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதுமட்டுமின்றி அந்த கிராமத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் முழு சோதனைக்குப் பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகிறது. அந்த வாகனத்தில் யார் வருகிறார்கள் என்ற குறிப்பு எடுக்கப்படுகிறது. வாகன எண் பதிவு செய்யப்படுகிறது. இப்படி பெரிய நெசலூர் கிராமம் காவல்துறையினரின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.