Garudan Movie : நேற்று முன்தினம் மே 31ம் தேதி சூரி, சசிகுமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியானது கருடன் திரைப்படம். மக்கள் மத்தியில் இந்த படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
பிரபல நடிகர் சூரி நடிப்பில் புதிதாக வெளியாகியுள்ள திரைப்படம் தான் கருடன். மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை இந்த படம் பெற்று வருகின்றது. பிரபல இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் கருடன். சசிகுமார், உன்னி முகுந்தன் மற்றும் மூத்த நடிகர் சமுத்திரகனி உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
நடிகர் சூரி தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக பயணித்து வரும் ஒரு சிறந்த கலைங்கன். லைட் மேனாக தனது பயணத்தை துவங்கிய அவர் பின் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்தார். வெண்ணிலா கபடி குழு என்ற படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் துவங்கி, சிவகார்த்திகேயன் வரை இவர் ஜோடி போட்டு காமெடி பண்ணாத நடிகர்களே இல்லை என்ற அளவிற்கு காமெடி நாயகனாக இவர் வலம்வந்தார்.
இந்த சூழலில் தான் வெற்றிமாறனின் விடுதலை என்ற படம், நடிகர் சூரி மீது இருந்த மக்களின் பார்வையை மாற்றியது. இனி காமெடி கதாபாத்திரங்களுக்கு இவரை அழைக்கவே கூடாது என்ற அளவிற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு நடிகராக மாறியுள்ளார் சூரி. இந்நிலையில் கடலூரில் சூரியின் கருடன் படத்தை பார்க்க நரிக்குறவ மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டையில் வசித்து வரும் 25க்கும் மேற்பட்ட நரிக்குறவமக்கள் கடலூரில் தங்கி பாத்திரம் விற்க்கும் பணிகளை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று கடலூர் அண்ணா மேம்பாலம் அருகே உள்ள ஒரு திரையரங்கில் கருடன் படம் பார்ப்பதற்காக வந்துள்ளனர். ஆனால் பணம் கொடுத்ததும் டிக்கெட் கொடுக்க நிர்வாகம் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து கடலூர் காவல்நிலையத்தில் தங்கள் நிலையை கூறி முற்றுகையிட்ட நரிக்குறவர்களை, போலீசார் வட்டாச்சியர் அலுவத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அதையடுத்து அவர்கள் வட்டாச்சியர் அலுவலகம் சென்றுள்ளனர். உடனே கோட்டாட்சியர், வட்டாச்சியர் தலைமையில் இந்த விஷயத்தை கவனிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
வட்டாச்சியர் திரையரங்க நிர்வாகத்தை கண்டித்து, நரிக்குறவர்கள் அனைவரையும் படம் பார்க்க உள்ளே வழியனுப்பி வைத்தார். இந்த சம்பவம் கடலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.