
தமிழகத்தில் அண்மை காலமாக கொலை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கோவையில் தனியார் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீரழிந்து விட்டதாக திமுக அரசு மீது அதிமுக, பாஜக, பாமக, நாம் தமிழர், தேமுதிக, தவெக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.
இதனால் தமிழகம் முழுவதும் காவல்துறையினர் விழிப்புடன் இருந்து கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று அதிகாலையிலேயே கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கஞ்சா வியாபாரி ஒருவரை காவல்துறை சுட்டுப்பிடித்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. சிதம்பரத்தை சேர்ந்த கஞ்சா வியாபாரி நவீன். 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் இவர் மீது அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. தலைமறைவாக இருந்த நவீனை நேற்று நவீனை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த நிலையில், மாரியப்பா நகரில் நவீன் பதுக்கி வைத்துள்ள கஞ்சாவை மீட்பதற்காக நவீனை இன்று அதிகாலை காவலர்கள் அழைத்து சென்றனர். அப்போது கஞ்சா வியாபாரி நவீன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவலர் ஐயப்பன் என்பவரை வெட்டி விட்டு தப்ப முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் நவீனின் கால் முட்டியில் துப்பாக்கியால் சுட்டு அவரை மடக்கிப் பிடித்தனர்.
காயம் அடைந்த காவலருக்கு சிகிச்சை
இதில் காயம் அடைந்த நவீனும், அவர் வெட்டியதால் காயம் அடைந்த காவலர் ஐயப்பனும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகாலையே காவல்துறை கஞ்சா வியாபாரியை சுட்டுப்பிடித்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக தங்களிடம் போக்கு காட்டும் ரவுடி உள்பட குற்றச்சம்பங்களில் ஈடுபடுபவர்களை சுட்டுப் பிடிப்பதை காவல் துறையினர் வழக்கமாக வைத்துள்ளனர். இதன்மூலம் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் பயந்து குற்றங்கள் குறையும் என உயர் காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.