
கடலூர்
நீண்ட காலமாக கிடப்பில் இருக்கும் கடலூர் – புதுச்சேரி – சென்னை இரயில்பாதை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கடலூர் நகர மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கடலூர் நகர மாநாடு கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த மாநாட்டில் நிர்வாகி சம்மந்தம் கொடியேற்றினார். திருமுருகன் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மருதவாணன் தொடக்க உரையாற்றினார். நகரச் செயலாளர் சுப்புராயன் அறிக்கையை வாசித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருப்பையன் வாழ்த்தி பேசினார். மாவட்ட செயலாளர் ஆறுமுகம் நிறைவுரையாற்றினார்.
இந்த மாநாட்டில், "கடலூர் துறைமுகத்தை ஆழப்படுத்தி, விரிவாக்கம் செய்து கப்பல் போக்குவரத்து நடைபெறவும், ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தக மையமாக மாற்ற வேண்டும்,
மஞ்சக்குப்பம், கடலூர் முதுநகர், திருப்பாதிரிப்புலியூர் ஆகிய இடங்களில் நகர பேருந்து நிலையம் அமைத்து கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும்,
நகராட்சியில் சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்,
கடலூர் நகர மக்களை சுகாதார சீர்கேட்டில் இருந்து பாதுகாக்க வேண்டும்,
நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள கடலூர் – புதுச்சேரி – சென்னை இரயில்பாதை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்" உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த மாநாட்டில் நகர நிர்வாகிகள் தனசிங், பாபு, ரஜினி ஆனந்த், இப்ராஹிம் சையது, பாபு, தமிழ்மணி, மணிகண்டன் மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மாநாட்டின் இறுதியில் செந்தில்குமார் நன்றித் தெரிவித்தார்.