
கோயம்புத்தூர்
கோவை அரசு மருத்துவமனையில் ஆள்பற்றாக்குறையால் பணிச்சுமை அதிகரிப்பு, மெமோ, தொடர்பில்லாத வேலைகளை செய்ய வலியுறுத்தல் என அடுக்கடுக்காக பிரச்சனைகளை சந்தித்து வந்த செவிலியர்கள், மருத்துவமனை டீனை முற்றுகையிட்டு முறையிட்டனர்.
கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் வேலைப் பார்த்து வரும் செவிலியர்கள் நேற்று காலை திடீரென டீன் அசோகன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது நோயாளிகள் இருக்கும் வார்டுகளை பார்வையிடுவதற்காக டீன் சென்றிருந்ததால் அவர் வரும் வரை சுமார் ஒரு மணி நேரம் செவிலியர்கள் அங்கேயே காத்திருந்தனர்.
பின்னர் அங்கு வந்த டீனை முற்றுகையிட்டு செவிலியர்கள், "கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர்களுக்கான 800 பணியிடங்கள் உள்ளன. ஆனால், 265 பேர் தான் பணிபுரிகிறோம். அரசு மருத்துவமனை விரிவாக்கத்திற்கு ஏற்ப செவிலியர்கள் நியமிக்கப்படவில்லை. எனவே பணிச்சுமை அதிகமாக உள்ளது.
மேலும், மருத்துவக் கழிவுகளை தரம் பிரித்து குப்பையில் போடுவது உள்ளிட்ட தொடர்பில்லாத வேலைகளை கூட செவிலியர்களே செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணி பாதிக்கப்படுகிறது.
இரண்டு அல்லது மூன்று வார்டுகளை கவனிக்கும் செவிலியர்கள், ஒரு வார்டில் இருந்து மற்றொரு வார்டுக்கு செல்லும்போது வார்டில் பணியில் இல்லை என்று கூறி ‘மெமோ’ கொடுத்து அச்சுறுத்துகிறார்கள். இதனால் மன உளைச்சலுடன் பணியாற்ற வேண்டிய நிலைக்கு ஆளாகிறோம்.
இது போன்ற பிரச்சனைகளை தெரிவித்தும் டீன் கண்டுகொள்ளாமல் இருப்பதால் சிரமப்படுகிறோம். எனவே, இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர்கள் தங்கள் குறைகளை கூறினர்.
"செவிலியர்கள்பற்றாக்குறை குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டுச் சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற பிரச்சனைகளை தீர்க்க மருத்துவர்களுடன் கலந்து பேசி உரிய வழிவகை செய்யப்படும்" என்று செவிலியர்களுக்கு, டீன் அசோகன் உறுதியளித்தார். அதனையேற்று செவிலியர்கள் தங்களது பணிக்கு நம்பிக்கையுடன் திரும்பினர்.