தீபாவளி அன்னிக்கு எத்தனை மணிக்கு பட்டாசு வெடிக்கணும்…? தமிழக அரசு அறிவிப்பு

By manimegalai aFirst Published Nov 1, 2021, 8:00 PM IST
Highlights

தீபாவளி நாளில் எந்த நேரத்தில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.

சென்னை: தீபாவளி நாளில் எந்த நேரத்தில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.

எத்தனை பண்டிகை வந்தாலும் அது தீபாவளிக்கு இணையாகாது. நாடு முழுவதும் மிக உற்சாகமாக கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி. வட இந்தியாவில் ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை இந்த பண்டிகை உற்சாகம் மின்ன கொண்டாடப்படும்.

தீபாவளியை கொண்டாடும் வகையில் புத்தாடைகள்,இனிப்புகள், அதோடு பட்டாசுகள் என மகிழ்ச்சி தாண்டவமாடும். புது ஆடைகள், பட்சணங்கள் தவிர்த்து அனைவரின் மனதுக்கும் வந்து போவது பட்டாசுகள் தான்.

ஆனால் சில ஆண்டுகளாக அதிக வேதியியல் பொருட்கள், ரசாயனம் கலந்த, ஒலி எழுப்பும் பட்டாசுகளை பயன்படுத்தக் கூடாது என்ற கோரிக்கைகள் முன் எடுக்கப்பட்டு வருகின்றன. 

சுற்றுச்சூழலை முன் வைத்து கூறப்பட்டாலும் குறிப்பாக தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்கக்கூடாது என்று உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் மாசை ஏற்படுத்தும் பட்டாசுகளை பயன்படுத்துதல் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந் நிலையில் தமிழகத்தில் பட்டாசுகளை வெடிக்க நேரக்கட்டுப்பாடுகளை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. சுற்றுச்சுசூழல், காலநிலை மாற்றத்துறையானது இதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

இது குறித்து அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: தீபாவளி நாளில் காலை 6 மணியில் இருந்து 7 மணி வரை பட்டாசுகள் வெடிக்கலாம். பின்னர் இரவு 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசுகளை வெடிக்கலாம்.

பசுமை பட்டாசுகளை தான் வெடிக்க வேண்டும். ஒலி மாசு, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிக்க கூடாது. சரவெடிகளை வெடிக்கக் கூடாது. ஹாஸ்பிடல், கல்வி நிலையங்கள், நீதிமன்றங்கள், மத வழிபாட்டு தலங்கள் ஆகிய இடங்களுக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்க கூடாது.

எளிதில் தீ விபத்து ஏற்படும் இடங்கள், குடிசைகள் அதிகம் உள்ள பகுதிகளில் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக அரசின் இந்த உத்தரவு பட்டாசுகளை வெடிக்க ஆர்வம் உள்ளவர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. தீபாவளி என்னும்  போது பட்டாசுகள் தான் பெருமளவு முக்கியத்துவம் பெறும். இப்படிப்பட்ட தருணத்தில் அதற்கு கட்டுப்பாடுகள் விதிப்பது அதன் விற்பனையை மேலும் பாதிக்கும் என்று உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே பட்டாசுகள் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் விலை உயர்ந்து விட்டது. ஆகையால் பட்டாசுகளின் விலை முன் எப்போதும் இல்லாத விலை இருக்கிறது.

இப்படிப்பட்ட தருணத்தில் பட்டாசுகள் விதிக்க நேரக்கெடு விதிக்கப்பட்டு உள்ளது இந்த தொழிலை மேலும் மோசமான நிலைக்கு கொண்டு போய் விட்டுவிடும் என்று தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். காலை மாலை என இரண்டு தருணங்களில் 1 மணி நேரம் என்ற காலத்தை நீட்டித்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறைந்தபட்சம் 4 மணி நேரமாவது பட்டாசுகளை வெடிக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்றும், ஏற்கனவே பட்டாசு தொழில் நலிவடைந்துள்ள நிலையில் தமிழக அரசு கை கொடுக்க வேண்டும் என்றும் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

click me!