கடுமையாக மின் கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசு.. ஆத்திரத்தில் இருக்கிறார்கள்.. கூட்டணி கட்சி தாக்கு

Published : Sep 11, 2022, 05:36 PM IST
கடுமையாக மின் கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசு.. ஆத்திரத்தில் இருக்கிறார்கள்.. கூட்டணி கட்சி தாக்கு

சுருக்கம்

தமிழ்நாடு அரசு மின்கட்டணத்தை மிகக் கடுமையான அளவில் உயர்த்தியிருப்பது மக்களிடம் ஆத்திரத்தையும், அதிருப்தியினையும் ஏற்படுத்தியுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தமிழ்நாடு அரசு மின் விநியோகக் கட்டணத்தை 32 சதவீதம் முதல் 53 சதவீதம் வரை கடுமையாக உயர்த்தியுள்ளது. இதன் மூலம் மின் வாரியத்துக்கு 59 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது மின் நுகர்வோர் தலையில் கடுமையான செலவுச் சுமை ஏற்றப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் மின்கட்டணம் குறைவு என்பதால், ஒன்றிய அரசு மின் கட்டணத்தை உயர்த்துமாறு தொடர்ந்து நிர்பந்தித்து வருகிறது என்றும், கடந்த எட்டு ஆண்டுகளாக மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்பதையும் காரணம் காட்டி கட்டண உயர்வை நியாயப்படுத்த முயற்சிப்பது சரியல்ல.

மேலும் படிக்க:மதுரைக்கு விரைவில் நல்ல செய்தி வரும்.. அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ட்வீட்.. என்ன காரணம் தெரியுமா..?

தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களுடன் மின்சாரம் கொள்முதல் தொடர்பான ஒப்பந்தங்கள் வாரியத்துக்கு ஏற்படுத்தும் பெருநஷ்டத்தை மூடிமறைப்பது ஏன்? என்ற வினாவுக்கும் ஏற்கதக்க விளக்கம் கிடைக்கவில்லை. தற்போது, நடைமுறையில் உள்ள 100 யூனிட் இலவச மின்சாரமும், மானிய சலுகை கட்டண முறையும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது எனினும், இந்தக் கட்டணச் சலுகையை விரும்பாதவர்கள், வாரியத்துக்கு தெரிவிக்கலாம் என்று கூறியிருப்பது மறைமுக நிர்பந்தம் மூலம் மானியங்களை பறிக்கும் செயலாகவே அமையும் என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

மின்கட்டண உயர்வு தவிர நிலைக் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதும், ஆண்டுக்கு 6 சதவிதம் மின்கட்டண உயர்வு செய்து கொள்ளவும் வழிவகை செய்திருப்பதை ஏற்க முடியாது. பாஜக ஒன்றிய அரசின் தாராளமயக் கொள்கைகள், மக்கள் வாழ்க்கை தரத்தில் கடுமையான தாக்குதலை நடத்தி, சரித்து வீழ்த்தி வரும் சூழலில், தமிழ்நாடு அரசு மின்கட்டணத்தை மிகக் கடுமையான அளவில் உயர்த்தியிருப்பது மக்களிடம் ஆத்திரத்தையும், அதிருப்தியினையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க:மாட்டிகிட்ட பங்கு.. சிக்னல் கொடுத்த ரெட்டி.. ஸ்க்ரிப்டில் வசமாக சிக்கிய அண்ணாமலை - வைரல் வீடியோ !

மின்கட்டண உயர்வு தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டங்களில் மின்நுகர்வோர் கூறிய கருத்துக்களுக்கு மதிப்பளித்து, உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டணத்தை நிறுத்தி வைத்து, நிலைக் கட்டணம் வசூலிப்பதையும், ஆண்டுக்கு 6 சதவீதம் மின் கட்டண உயர்வு செய்யும் திட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும். மின்கட்டணத்தை வெகுவாக குறைத்து, புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.'' இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகத்தில் இருந்து சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு லாரி லாரியாக சென்ற பிஸ்கெட்! மாஸ் காட்டும் அறநிலையத்துறை!
மன்னார்குடியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! அலறி துடித்த பயணிகளின் நிலை என்ன?