
சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்களில் காதல் திருமணங்களை நடத்திக் கொள்ளலாம் என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அறிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ஆணவக் கொலைகளுக்கு எதிரான சமூகநீதிக் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய பெ. சண்முகம், இந்தக் கருத்தை வெளியிட்டார்.
சாதி மறுப்பு திருமணங்கள்
பின்னர், தனது சமூக வலைதளப் பக்கத்தில் இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், "தமிழகத்தில் சாதி மறுப்பு திருமணங்கள் செய்துகொள்ள தனி ஏற்பாடு இல்லை. எனவே, காதலர்களுக்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் திறந்தே இருக்கும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சமீபத்திய ஆணவக் கொலை சம்பவங்கள் குறித்து கவலை தெரிவித்த அவர், "நெல்லையில் ஒரே வருடத்தில் 240 கொலைகள் நடந்துள்ளன. இது பதிவு செய்யப்பட்ட கணக்கு மட்டுமே. நிலைமை கட்டுக்கடங்காமல் செல்கிறது. கொலைகாரனை கொண்டாடும் சூழல் உருவாகியுள்ளது. அதே சமயம், ஆணவக் கொலைக்கு எதிரான நிலைப்பாடு பொதுச் சமூகத்தில் உருவாகியுள்ளது," என்று தெரிவித்தார்.
சாதி ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் வேண்டும்
இதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, தமிழக அரசு சாதி ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
"வருகிற சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே முதலமைச்சர் இந்தச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும்," என்றும் பெ. சண்முகம் கோரிக்கை விடுத்தார். இந்தக் கருத்தரங்கின் புகைப்படங்களையும் அவர் தனது பதிவில் பகிர்ந்துள்ளார்.