சென்னை, பெங்களூருக்கு நிகராக சேலம்: மீண்டும் 8 வழிச்சாலை - சி.பி.ராதாகிருஷ்ணன் தகவல்!

By Manikanda Prabu  |  First Published Nov 27, 2023, 12:37 PM IST

சேலம் - சென்னை இடையேயான எட்டுவழிச் சாலைத் திட்டம் மீண்டும் வரும் என ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்


ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று சேலம் சென்றிருந்தார். அங்குள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆன்மிகம் மட்டும்தான் தனி நபர் ஒழுக்கத்தை, பொதுவாழ்வில் எதையும் எதிர்பாராமல் கடைக்கோடியில் இருக்கும் மனிதருக்கும் உதவும் எண்ணத்தை வளர்க்கும். சேலம் மாநகரின் மகத்தான பாக்கியம் கோட்டை மாரியம்மனின் பலம்தான். காலத்தைக் கடந்து சேலம் வெற்றிகரமான நகரமாக மாநகரமாக உயர்ந்து நிற்கிறது. எட்டுவழிச் சாலைத் திட்டம் மீண்டும் வரும். சேலம் நகரம் சென்னைக்கு நிகராக, பெங்களூருக்கு நிகரானதாக மாற வேண்டுமென்று மாரியம்மனை வேண்டுகிறேன்.” என்றார்.

உதயநிதியால் சனாதனத்தை ஒழிக்க முடியாது எனவும், அதனை ஒழிக்க வேண்டும் என்றால் முதலில் காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியே வர வேண்டும் எனவும் அவர் கூறினார். மேலும், “அரசியல் சாசனத்துக்கு மாறாக எந்த சட்டம் இயற்றப்பட்டாலும், அதைக் கிடப்பில் போட வேண்டியதும், உச்ச நீதிமன்றத்தின் கருத்தைக் கேட்பதும், அட்டர்னி ஜெனரல் கருத்தைக் கேட்பதும் ஆளுநரின் கடமை.” எனவும் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Tap to resize

Latest Videos

தொடர்ந்து பேசிய அவர், “ஆளுநருக்கு கொடுக்கும் சம்பளம் நாங்கள் கொடுக்கும் பிச்சை என்கிறார்கள். அப்படியானால், நீங்கள் வாங்கும் சம்பளம் யார் போட்ட பிச்சை. அனைவருக்கும் மக்கள்தான் எஜமானர்கள். மக்களின் வரிப்பணத்தில்தான் அனைவருக்கும் சம்பளம் கிடைக்கிறது என்பதை திமுக அமைச்சர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.” என்றார்.

தமிழச்சி தங்கபாண்டியனுக்கு கார்த்தி சிதம்பரம் பதிலடி!

எட்டுவழிச்சாலை திட்டம்


முன்னதாக, கடந்த 2018ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில், மத்திய அரசால் சேலம் - சென்னை இடையே எட்டு வழிச்சாலை திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், இதை நடைமுறைப்படுத்தினால் 7,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழிக்கப்படும் என்னும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. எனவே, இந்தத் திட்டத்தால் பாதிக்கப்படும் ஆறு மாவட்டத்தின் விவசாய அமைப்புகள் இதை எதிர்த்துப் போராட்டம் நடத்தின.

இந்தத் திட்டத்தை அப்போதைய எதிர்க்கட்சியாக இருந்த திமுக கடுமையாக எதிர்த்தது. ஆனால், 2021ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தவுடன் இந்த விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு கேள்விக்குள்ளாகியுள்ளது. “சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை திமுக எதிர்க்கவில்லை என்றும், அதனை மாற்றுப் பாதையில் செயல்படுத்த வேண்டும் என்பதுதான் தங்களின் கருத்து. எனவே இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் கொள்கை முடிவு எடுப்பார்.” என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

வரம்புகள் மீறி விவசாயிகளின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால், நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். சாலை விரிவுபடுத்தும் திட்டங்களுக்கு திமுக என்றும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என எ.வ.வேலு கூறியதும், சட்டமன்றத்தில் எட்டு வழிச்சாலையை, ஆறு வழிச்சாலையாக மாற்றி திட்டம் செயல்படுத்த இருப்பதாகக் கூறியதும் சர்ச்சையானது.

திட்டம் எந்த வகையில் கொண்டுவரப்பட்டாலும் விவசாய நிலம் கையகப்படுத்தினால், நிச்சயம் எதிர்ப்பு கிளம்பும். திமுக தேர்தல் அறிக்கையில் கூட, விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல், விளைநிலங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவதைத் தடுத்திட நடவடிக்கைகள் மேற்கொண்டு, விளைநிலங்கள் பாதுகாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.

click me!