
தமிழகத்தின் கோவையை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராக அண்மையில் பதவியேற்றார். குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு அவர் முதன் முறையாக இன்று தமிழகம் வந்தார். ஷெசல்ஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அங்கிருந்து நேரடியாக தனி விமானம் மூலம் கோவை வந்தார்.
குடியரசு துணைத் தலைவரை தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் சாமிநாதன், முத்துசாமி ஆகியோர் வரவேற்றனர். மேலும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிசாவன் ஆகியோரும் உற்சாகமாக வரவேற்றனர்.
இதற்கிடையே குடியரசு துணைத் தலைவருக்காக கோவை மாநகராட்சி அலுவலகம் அருகே பாதுகாப்பு போட்ட இடத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள் பாதுகாப்பு வளையத்தையும் மீறி அத்துமீறி உள்ளே சென்றனர். இது தொடர்பாக அவர்களை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்திய நிலையில், குடியரசு துணைத் தலைவர் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதாக காவல்துறை மீது பாஜகவினர் குற்றம்சாட்டியிருந்தனர்.
இந்த நிலையில், தனது பாதுகாப்பில் எந்த வித குளறுபடியும் இல்லை என்று பாஜக குற்றச்சாட்டுக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார். தமிழகம் வந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கோவை மாவட்ட சிறுதொழில்கள் சங்கமான கொடிசியா சார்பில் பாராட்டு விழா கோவை பீளமேடு பகுதியில் உள்ள கொடிசியா அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன், ''எனது பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை. கோவை மக்கள் தான் எனக்கு பாதுகாப்பு'' என்று தெரிவித்தார்.
கோவை மண்ணில் பாராட்டு மழை
தொடர்ந்து இந்த விழாவில் பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன், '' குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் முதலில் சென்னை வருவது தான் திட்டமாக இருந்தது. ஆனால் செசல்ஸ் நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்கும் நிகழ்ச்சிக்கு செல்லுமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார். கோவை மண் என்னை இழுத்து வந்ததாக கருதுகிறேன். இந்த மண்ணில் இருந்து தான் பொதுவாழ்க்கை துவங்கியது. இந்த மண்ணில் சிந்திய ரத்தம் தான் மத்தியில் நிலையான அரசு தொடர வழிவகுத்துள்ளது. அரசியல் வேறுபாடுகளை கடந்து என்னை வாழ்த்தவும், வரவேற்கவும் வருகை தந்துள்ள அனைவருக்கும் நன்றி.
மக்களின் பிரச்சனையை தீர்ப்பேன்
குடியரசு துணைத் தலைவர் பதவி எனக்கு மட்டுமான பெருமை அல்ல. ஒட்டுமொத்த தமிழகத்திற்கான, தமிழ் மக்களுக்கான பெருமையாக கருதுகிறேன். கோவையில் விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில் முனைவோர்கள் உள்பட எல்லா தரப்பு மக்களின் பிரச்சனையையும் மக்கள் பிரதிநிதிகள் உடன் நின்று தீர்த்து வைப்பேன்'' என்று தெரிவித்தார். இந்த விழாவில் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், அண்ணாமலை, எச்.ராஜா, அதிமுகவின் எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.