
கோவையில் போக்குவரத்து காவல் அதிகாரி ஒருவர் ஸ்விகி ஊழியரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை அடுத்து சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். கோயம்புத்தூர் மாவட்டம் நீலாம்பூர் பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம். இவர் ஸ்விகி என்னும் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை செய்து வருகிறார். இவர் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது தனியார் பள்ளி வாகனம் ஒன்று சாலையில் நடந்து சென்ற பெண்ணை இடித்து விட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. அதனைக் கண்ட மோகனசுந்தரம் அந்த வாகனத்தை விரட்டிச் சென்ற போது போக்குவரத்து காவலர் தன்னை தாக்கியதாகவும் அதற்கு ஒரு நீதி வேண்டும் எனவும் கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அவிநாசி சாலை பன் மால் சிக்னல் பகுதியில் தனியார் பள்ளி வாகனம் ஒன்று பெண்ணை இழுத்து விட்டு நிற்காமல் சென்றது.
அந்த வாகனத்தை தான் வழிமறித்து நிறுத்தி ஓட்டுனரிடம் பெண்ணை இடித்தது குறித்து கேட்டுக் கொண்டிருக்கும் போது அங்கிருந்த போக்குவரத்து காவலர் ஒருவர் தன்னை தாக்கியதாக தெரிவித்தார். அதனை விசாரிக்க நாங்கள் இருக்கிறோம், நீ யார்? எனவும், மேலும் அந்த பள்ளி வாகனம் யாருடையது என தெரியுமா? என்றும் கேட்டு, அந்த பள்ளி வாகன ஓட்டுனரை நைசாக அனுப்பி வைத்துவிட்டு தன்னிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு சிறிது நேரம் கழித்து அனுப்பியதாக தெரிவித்தார்.
சம்பவ இடத்தில் இருந்த அந்தப் பெண் இது குறித்து கேட்டபோது போக்குவரத்து காவலர் அந்தப் பெண்ணையும் செல்லுமாறு கூறி அனுப்பி விட்டதாக தெரிவித்தார். தனியார் பள்ளி வாகனம் செய்த தவறை தட்டிக் கேட்பதற்கு தன் மீது தாக்குதல் நடத்தியது நியாயமற்ற செயல். தான் இதுகுறித்து மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார். போக்குவரத்து காவல் அதிகாரி உணவு டெலிவரி ஊழியரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த விவகாரத்தை தொடர்ந்து அந்த வீடியோ வெளியான சில மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.