அனைத்து பேருந்துகளும் நின்று செல்லும் வகையில் தகவல் பலகை வைக்க வேண்டும் – மதுரை உயர்நீதிமன்றம்

Asianet News Tamil  
Published : Oct 13, 2016, 12:42 AM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
அனைத்து பேருந்துகளும் நின்று செல்லும் வகையில் தகவல் பலகை வைக்க வேண்டும் – மதுரை உயர்நீதிமன்றம்

சுருக்கம்

முக்காணியில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்லும் வகையில் தகவல் பலகை வைக்க வேண்டும் என்று தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அதிகாரிக்கு, மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் முக்காணியை சேர்ந்தவர் சந்தானராஜ். முக்காணி பொதுமக்கள் நலச்சங்கத்தின் தலைவரான இவர், மதுரை உயர்நீதிமன்றம் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “முக்காணியில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். விவசாயத்தை நம்பியே இங்குள்ள மக்கள் வசித்து வருகின்றனர். இதுதவிர பலர் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இங்கு ஒரு நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஆகியவை உள்ளன.

தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் அனைத்து பேருந்துகளும் முக்காணி வழியாகத்தான் செல்கின்றன. முக்காணியில் இருந்து ஏராளமானோர் தினமும் தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் சென்று வருகின்றனர். இங்குள்ளவர்கள் மருத்துவ வசதிக்காக தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூருக்கு தான் செல்ல வேண்டியதுள்ளது.

இதுதவிர வெளியூரில் படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தினமும் பேருந்துகளில் தான் சென்று வருகின்றனர். முக்காணியில் பேருந்து நிறுத்தம் இருந்தபோதும் அரசு போக்குவரத்துக்கழகத்தின் அனைத்து பேருந்துகளும் இங்கு நின்று செல்வதில்லை. சில பேருந்துகளின் ஓட்டுநர், நடத்துநர்கள் அருகில் உள்ள ஆத்தூர் பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டு செல்வதால் அங்கிருந்து 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து தான் முக்காணிக்கு வரவேண்டி இருக்கிறது.

இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக நெல்லை கோட்ட மேலாளரிடம் 2009–ம் ஆண்டு புகார் அளித்தோம். எங்களது கோரிக்கையை ஏற்று எக்ஸ்பிரஸ் பேருந்துகளை தவிர்த்து அனைத்து பேருந்துகளும் முக்காணியில் நின்று செல்ல வேண்டும் என்று 12.10.2009 அன்று நெல்லை கோட்ட மேலாளர் உத்தரவிட்டார்.

இதன்பின்பும் பல ஓட்டுநர், நடத்துநர்கள் முக்காணியில் பேருந்துகளை நிறுத்த மறுத்து வருகின்றனர். தூத்துக்குடியில் இருந்து வரும் பேருந்துகளில் முக்காணிக்கு டிக்கெட் கேட்டால் ஆத்தூரில் தான் பேருந்து நிறுத்தம் என்று கூறி டிக்கெட் வழங்குகின்றனர். இதனால், தேவையில்லாமல் கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டியதுள்ளது.

எனவே, நெல்லை மற்றும் மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட அனைத்து பேருந்துகளும் முக்காணியில் நின்று செல்ல வேண்டும் என்று உத்தரவிட வேண்டும். இதை உறுதி செய்யும் வகையில் அனைத்து பேருந்துகளும் முக்காணியில் நின்று செல்ல வேண்டும் என்று தகவல் பலகை வைக்க தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் சார்பில் வக்கீல்கள் பொன்.கார்த்திகேயன், ஜோசப்சத்தியநேசன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். விசாரணையின்போது, பை–பாஸ் ரைடர் பஸ்களை தவிர்த்து அனைத்து பேருந்துகளும் முக்காணி பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்துக்கழகத்தின் தரப்பில் ஆஜரான வக்கீல் தெரிவித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர். மேலும், பை–பாஸ் ரைடர் பேருந்துகளை தவிர்த்து மற்ற அனைத்து பேருந்துகளும் முக்காணியில் நின்று செல்லும் வகையில் தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அதிகாரி தகவல் பலகை வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

PREV
click me!

Recommended Stories

தேசிய கொடியை ஏற்றி முப்படைகளின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி
Tamil News Live today 26 January 2026: அஜித், விஜய் பட கதாநாயகி இப்போ சீரியலில்.! சின்னத்திரையில் அதிரடி ரீ-என்ட்ரியாகும் சங்கவி!